மதுரை மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் சங்கீதா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தை துவக்கி வைத்து கலெக்டர் சங்கீதா பேசுகையில், “அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் சான்று விதைகள் நெல் 505.73 மெட்ரிக் டன் சிறுதானியங்கள் 49.68 மெட்ரிக் டன் பயறு வகைகள் 7.72 மெட்ரிக் டன் எண்ணெய் வித்துக்கள் 12.46 மெட்ரிக் டன் மற்றும் பருத்தி 5.93 மெட்ரிக் டன் இருப்பில் உள்ளது.
பருத்தி மற்றும் கரும்பின் விளைச்சல் குறைய காரணம் அறிந்து அதை சரி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மேலூர், கள்ளிக்குடி, கொட்டாம்பட்டியில்
இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர். இதில் கடந்த முறை மாம்பட்டி திருமங்கலம் உள்ளிட்ட வட்டார பகுதிகளில் புகார் அளித்த மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் நடவடிக்கை எடுக்கப்பட்ட மனுதாரர்கள் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்தனர். இக்கூட்டத்தில், டி.ஆர்.ஓ சக்திவேல், வேளாண்மை இணை இயக்குநர் சுப்புராஜ் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.