சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “இந்திய அளவில் முதலில் தகவல் தொழில்நுட்ப அணியை உருவாக்கிய கட்சி அ.தி.மு.க. 10 சதவீத வாக்குகளை அ.தி.மு.க. இழந்து இருக்கிறது. இழந்த வாக்குகளை நாம் மீட்டெடுக்க வேண்டும். அதற்கு ஏற்ப பணியாற்றுங்கள்
அ.தி.மு.க-வுக்கு எதிரான பொய் செய்திகளை தகவல் தொழில்நுட்ப அணி முறியடிக்க வேண்டும், அந்த வலிமை உங்களுக்கு இருக்கிறது. கடைசி கட்டத்தில் இருக்கும் மக்களுக்கும் அ.தி.மு.க செய்த சாதனைகள் சென்று சேர வேண்டும். யூடியூப் சேனல்கள் மூலம் அ.தி.மு.க செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
எந்த அளவுக்கு மக்களிடம் கொண்டு செல்கிறீர்களோ, அந்த அளவுக்கு கட்சிக்கு பலம். இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வாயிலாக அதிமுக தொடர்பான பதிவுகளை பதிவிட வேண்டும். உள்ளூர் மக்கள் சார்ந்த பிரச்னைகளை காணொலிகளாக பதிவிட வேண்டும். சமூக வலைத்தளத்தில் உங்கள் பதிவுகள் கண்ணியத்தோடு இருக்க வேண்டும்.
தரம் தாழ்ந்த விமர்சனங்களை தவிர்க்க வேண்டும். நம்முடைய இலக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தல், மீண்டும் அ.தி.மு.க ஆட்சி அமைய உங்களது பங்கு மிக முக்கியம். மாவட்டச் செயலாளர்கள் உடைய பணிகளை காணொலிகளாக பதிவிடுவது தகவல் தொழில்நுட்ப அணியின் பணி கிடையாது” என்று அவர் கூறினார்.