கோவை: ஹிந்து விரோத தி.மு.க., அரசுக்கு நல்ல புத்தியைக் கொடு என, ஹிந்து முன்னணியினர் மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் தலைமையில், கோவை கோனியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர்.
பின், அவர் அளித்த பேட்டி:
வங்கதேசத்தில் மாணவர்கள் போராடி வருகின்றனர். அது அவர்கள் உரிமை. ஆனால், இதைப் பயன்படுத்தி, ஹிந்துக்களின் வீடு, கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஹிந்துப் பெண்கள் நிர்வாணம் செய்யப்படுகின்றனர்; பலாத்காரம் செய்யப்படுகின்றனர். ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு உலகம் முழுக்க கண்டனம் எழுந்துள்ளது. லண்டனில் கண்டனப் பேரணி நடத்தியுள்ளனர். அமெரிக்காவும் கண்டித்துள்ளது.
ஹிந்து முன்னணி சார்பில், வங்கதேச ஹிந்துக்களுக்கு ஆதரவாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு, காவல் துறையிடம் அனுமதி கேட்டோம். மறுத்துவிட்டனர்.
பலமுறை தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திஉள்ளோம். ஆனால், இம்முறை அதையும் செய்யவில்லை. அனுமதி மறுத்த அரசுக்கு எதிராக நீதிமன்றம் வாயிலாக அனுமதி பெற்று, ஆர்ப்பாட்டம் நடத்துவோம். அதற்காக ஆர்ப்பாட்டம் ஒத்துவைக்கப்பட்டுள்ளது.
ஹிந்து விரோத தி.மு.க., அரசுக்கு, நல்ல புத்தி கொடுக்க வேண்டும் என, கோனியம்மனை வேண்டிக் கொண்டுஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.