சென்னை: ‘சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல். ஏற்றுக்கொள்ள முடியாதது’ என சிவகங்கை தொகுதி எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்தார்.
பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், பெண் போலீசாருக்கு எதிராகவும், போலீஸ் உயரதிகாரிகளுக்கு எதிராகவும், அவதூறு கருத்துக்களை தெரிவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்தது.
மீண்டும் குண்டாஸ்
ரத்து உத்தரவு வெளியாகி இரண்டு நாட்களே ஆன நிலையில், சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்ட எஸ்.பி., பரிந்துரைபடி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க அந்த மாவட்ட கலெக்டர் உத்தவிட்டார். புழலில் இருந்து, சவுக்கு சங்கர் மதுரை சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் கலெக்டரின் உத்தரவு சிறை நிர்வாகத்திடம் அனுப்பி வைக்கப்பட்டது.
அப்பட்டமான சட்டமீறல்
இந்நிலையில், எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்த்தி சிதம்பரம் வெளியிட்ட அறிக்கை: சவுக்கு சங்கரின் பேச்சு அநாகரீகமானது. அவர் மிகைப்படுத்தல் மற்றும் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் பேசுகிறார். எனினும் அவர் மீது மீண்டும் குண்டர் சட்டம் பாய்ந்திருப்பது அப்பட்டமான விதிமீறல். ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசின் முடிவை நீதிமன்றம் ரத்து செய்வது இன்னொரு முறை நடக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிருப்தி
அவரது இந்த கருத்து, கூட்டணி கட்சியான ஆளும் தி.மு.க.,வினர் மத்தியிலும், ஆளுங்கட்சியை அனுசரித்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கும் காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் நிச்சயம் அதிருப்தியை ஏற்படுத்தும்.