போலீசாரை தாக்கி தப்ப முயன்ற ரவுடியை துரத்தி சென்று சுட்டு பிடித்த பெண் எஸ்.ஐ.,

சென்னை:விசாரணையின் போது, போலீசாரை தாக்கி தப்பியோட முயன்ற ரவுடியை, துணிச்சலாக துரத்திச் சென்ற பெண் எஸ்.ஐ., துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார்.

சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர் ரோஹித் ராஜ், 34. ரவுடியாக வலம் வந்த இவர் மீது, சென்னையில் மட்டுமின்றி மதுரையிலும் வழக்குகள் உள்ளன. 2017ல், தீச்சட்டி முருகன், மயிலாப்பூரில் சிவகுமார் ஆகியோரை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தார்.

மிரட்டல்

மேலும், 2022 மே 18ல், சேத்துப்பட்டு வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்த பைனான்சியர் ஆறுமுகத்தை, 36, ஷெனாய் நகரில் பட்டப்பகலில், ஓட ஓட விரட்டி படுகொலை செய்தார். இந்த மூன்று கொலை வழக்குகள் உட்பட இவர் மீது, 14 வழக்குகள் உள்ளன.

ஜாமினில் வெளியே வந்த ரோஹித் ராஜ், விசாரணைக்கு ஆஜராகாமல் தேனி, மதுரை என, பல இடங்களில் தலைமறைவாக தங்கி, போலீசாருக்கு, ‘தண்ணி’ காட்டி வந்தார்.

இந்நிலையில், ரோஹித் ராஜ் சில நாட்களுக்கு முன் சென்னைக்கு வந்துள்ளதாகவும், கீழ்ப்பாக்கம் டி.பி.,சத்திரம் பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சியின் கிறிஸ்துவ கல்லறை தோட்டத்தில் பதுங்கி இருப்பதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று அதிகாலை 4:30 மணிக்கு, டி.பி.சத்திரம் பெண் எஸ்.ஐ., கலைச்செல்வி தலைமையிலான போலீசார், கல்லறை தோட்டத்தில் பதுங்கியிருந்த ரோஹித் ராஜை சுற்றி வளைத்தனர்.

அப்போது, தப்பியோட முயன்றார். போலீஸ்காரர்கள் சரவணகுமார், பிரதீப் ஆகியோர் அவரை மடக்கி பிடிக்க முயன்றனர். உடனே, அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்து, இருவரையும் தாக்கிய ரோஹித் ராஜ், போலீசாருக்கு மிரட்டல் விடுத்து ஓடினார்.

சுதாரித்த எஸ்.ஐ., கலைச்செல்வி வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரிக்கை விடுத்தார். அதையும் மீறி ரோஹித் ராஜ் தப்ப முயன்றதால், காலில் குறிபார்த்து சுட்டார். இதில், தடுமாறி கீழே விழுந்தார்.

அதற்குள் சம்பவ இடத்திற்கு வந்த, சக போலீசார் காயமடைந்த போலீஸ்காரர்கள் மற்றும் ரவுடியை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின், ரோஹித் ராஜ் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சம்பவம்குறித்து டி.பி.சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

கமிஷனர் பாராட்டு

கொலை வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளியை துணிச்சலாக செயல்பட்டு, துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்த எஸ்.ஐ., கலைச்செல்வியை, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

அத்துடன், காவல் துறையைச் சேர்ந்த பிற உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

யார் கலைச்செல்வி?

தேனி மாவட்டம் வருசநாட்டைச் சேர்ந்தவர் கலைச்செல்வி, 34. இவருக்கு திருமணமாகி, சென்னை அண்ணா நகரில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார். 2011ல் நேரடி எஸ்.ஐ.,யாக தேர்வான கலைச்செல்வி, 2012ல் தலைமை செயலக காலனியில் முதல் பணியை துவங்கினார்.பின், சேத்துப்பட்டு, அபிராமபுரம், கோட்டூர்புரம், சிந்தாதிரிப்பேட்டை, அயனாவரம் மற்றும் தலைமையிடத்திலும் பணிபுரிந்தார். தற்போது, டி.பி.சத்திரத்தில் எஸ்.ஐ.,யாக பணிபுரிகிறார்.

 

யார் இந்த ரோஹித்?

ரோகித் ராஜ், டி.பி.சத்திரம் பகுதியில், ரவுடி ஜெயராஜ் என்பவரின் கூலிப்படையில் ஒருவராக இருந்துள்ளார். எதிரிகளால் ஜெயராஜ் கொலை செய்யப்பட்ட பின், பிரபல ரவுடியான அரும்பாக்கம் ராதா, மதுரை பாலாவின் கூட்டாளியாக மாறி, கொலைகளில் ஈடுபட்டார். இதையடுத்து, போலீசாரின், ‘ஏ’ கேட்டகரி ரவுடி பட்டியலில் சேர்க்கப்பட்டார். கொலை வழக்கு தொடர்பாக இவர் மீது மூன்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. தலைமறைவாக இருந்து வந்த ரோஹித் ராஜ், டி.பி.சத்திரம் பகுதியில் பதுங்கி இருந்த போது, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார் என, போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *