இருக்குது பச்சை மட்டை அடி: சவுக்கு சங்கர் விவகாரத்தில் அரசுக்கு சீமான் கண்டனம்

சென்னை: மக்களின் துயரங்களை பேசுவோரின் குரல்வளையை நெரிப்பதற்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள் என சீமான் கடுமையாக சாடியுள்ளார்.

ஜனநாயக விரோதம்

அவரது அறிக்கை: ஊடகவியலாளரும், அரசியல் திறனாய்வாளருமான சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தை ஏவியிருக்கும் தி.மு.க., அரசின் செயல் ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதம்.
பெண் காவலர்கள் குறித்துப் பேசியது உட்படப் பல்வேறு வழக்குகளில் தம்பி சவுக்கு சங்கர் பிணை பெற்றுள்ள நிலையில், குண்டர் சட்டமும் ரத்தாகியதால் ஒரு சில நாட்களில் விடுதலையாகலாம் எனும் வாய்ப்பிருந்தபோது, இப்போது மீண்டும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருப்பது மோசமான ஜனநாயக விரோத நடவடிக்கை.

நீதிமன்ற அவமதிப்பு

கஞ்சா வைத்திருந்தாரெனப் புனையப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் பிணை பெற்றுவிட்ட பிறகும், அதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் குண்டர் சட்டத்தை செலுத்துவது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு. சவுக்கு சங்கர் தவறாக பேசியதற்கு அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இந்தியத் தண்டனைச் சட்டமே போதுமானது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும், அதனை மீறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மக்களுக்கெதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, பொது அமைதியைக் கெடுக்கும் சமூக விரோதிகள், வளக்கொள்ளையர்கள், வன்முறையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் போன்றோரைக் கைது செய்து ஓராண்டு முடக்குவதன் மூலம் குற்றங்களைத் தடுக்க பயன்படுத்தப்படும் குண்டர் எனும் தடுப்புக்காவல் சட்டத்தை, அவதூறு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது பயன்படுத்துவது வெளிப்படையான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை.

பாசிசத்தின் உச்சம்

அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மேல் பொய்யாக வழக்குகளைப் புனைவதும், சிறைக்குள் வைத்துத் தாக்குவதும், பல முறை குண்டர் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதுமான தி.மு.க., அரசின் தொடர் போக்குகள் யாவும் பாசிசத்தின் உச்சம்.
பா.ஜ., அரசு புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை போன்ற அதிகார அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரையும், போராட்டக்காரர்களையும் முடக்குகிறதென்றால், தமிழகத்தை ஆளும் தி.மு.க., அரசு உளவுத்துறையையும், போலீசாரையும் பயன்படுத்தி ஊடகவியலாளர்களையும், ஜனநாயகச்சக்திகளையும் அச்சுறுத்த முற்படுகிறது.

கொடுங்கோல்

“சமூக வலைத்தளங்களை மக்களின் குறைகளை அறிந்துகொள்ள உதவும் கருவியாக அரசு பார்க்க வேண்டுமே ஒழிய, குறைகளைச் சொல்லும் நபர்களை அடக்கி ஒடுக்க முயற்சிக்கக்கூடாது” என சென்னை உயர்மன்றத்தின் மாண்பமை நீதிபதிகள் கூறிய பிறகும், அடக்குமுறையை ஏவி, சவுக்கு சங்கரைப் பழிவாங்கத் துடிக்கும் திமுக அரசின் கொடுங்கோல் போக்கை வன்மையாக எதிர்க்கிறேன். இந்த அட்டூழியத்துக்கு மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை. இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *