சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மேல்முறையீடு மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று (செப்.26) காலை 10.30 மணிக்கு தீர்ப்பளிக்கிறது.
வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அவை ஜாமீன் மனு தொடர்ச்சியாக தள்ளுபடி செய்யப்பட்டன. கிட்டதட்ட 300 நாட்களுக்கு மேலாக செந்தில் பாலாஜி சிறையில் உள்ளார்.
இந்நிலையில், ஓராண்டுக்கு மேலாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையில் செந்தில் பாலாஜி தரப்பு- அமலாக்கத் துறை தரப்பு என இருதரப்பினருக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. தொடர்ந்து இருதரப்பு விசாரணை முடிந்து ஜாமீன் குறித்தான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்க உள்ளனர்.