சென்னை: ”அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீதான விமர்சனத்தை திரும்ப பெறப் போவதில்லை. என்னை விமர்சித்தால், அதே பாணியில் பதிலடி கொடுப்பேன்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறினார்.
Advertisement
அவர் அளித்த பேட்டி:
பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை, செப்., 1ல் துவங்குகிறது. பா.ஜ.,வின் முதல் அடிப்படை உறுப்பினராக, பிரதமர் மோடி இணைகிறார். தமிழகத்தில், செப்.,2ல், முதல் உறுப்பினராக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இணைகிறார்.
அரசியல் தொடர்பே இல்லாத, 1 லட்சம் இளைஞர்களை கண்டறிந்து, அரசியல் தலைவர்களாக உருவாக்க, செப்டம்பர், அக்டோபரில் கிராமங்களை நோக்கிச் செல்ல உள்ளோம்.
பா.ஜ.வில் இணைய, மொபைல் போன் எண் கொடுக்கப்படும். அதில், ‘மிஸ்டு கால்’ கொடுத்தால் பா.ஜ., நிர்வாகிகள் வீட்டுக்கு வந்து உறுப்பினராக சேர்ப்பார்கள். அதன்பின், உட்கட்சி தேர்தல் நடக்கும்.
ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின், ஐப்பான், துபாய், சிங்கப்பூர் நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் தோல்வி அடைந்துள்ளது. இப்போது, அமெரிக்கா செல்கிறார்.
அவர் செல்லவுள்ள சான்பிரான்சிஸ்கோ போன்ற பகுதிகளில், தமிழர்கள் கொடிகட்டி பறக்கின்றனர். அவர்களை பிடித்தாலே முதலீடுகள் வரும். அனைத்தையும் பா.ஜ., கவனித்து வருகிறது.
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 5,000 கோடி ரூபாயை, மத்திய அரசு கொடுத்துள்ளது. நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டத்தை ஒப்புக்கொண்ட தமிழக அரசு, மும்மொழிக் கொள்கை இருப்பதாகக் கூறி இப்போது மறுக்கிறது.