தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது” என்று ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2021-ம் ஆண்டு தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கும், தி.மு.க அரசுக்கும் பல விஷயங்களில் ஏழாம் பொருத்தம்தான். தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானங்களுக்கு ஒப்புதல் அனுப்பாமல் வைத்திருப்பது, திராவிட இயக்க சித்தாந்தத்தை விமர்சிப்பது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் தமிழக அரசுடன் முரண் என பல விவகாரங்களில் தி.மு.க அரசுடன் மோதல் போக்கு தொடர்கிறது.
அண்மையில்கூட, ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, நாட்டில் தோன்றிய பல்வேறு பிரிவினை சித்தாந்தங்களுள் திராவிட சித்தாந்தமும் ஒன்று என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், “தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது” என்று ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் நடந்த தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என். ரவி, “தேசிய பாடத் திட்டத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத் திட்டத்தின் தரம் மோசமாக உள்ளது. பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடினேன். மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்றவற்றில் அறிவுத்திறன் குறைவாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும்” என்று பேசினார்.
ஆளுநர் ஆர்.என். ரவியின் இந்த பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்வினைகள் எழுந்துள்ளன. தமிழ்நாட்டில் அதிக அளவில் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசின் தரவுகளின் அடிப்படையில் நாட்டிலேயே பள்ளி கல்வி, உயர் கல்வித் துறைக்கு தமிழ்நாடு சிறந்த மாநிலமாக இருந்து வருகிறது.
தி.மு.க தலைமையிலான தமிழக அரசு, தேசிய கல்வி கொள்கையில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட அம்சங்களை எதிர்த்து வருகிறது. ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, தவறான கல்விக் கொள்கையால் படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதாகவும் புதிய தேசிய கல்விக் கொள்கை புதிய இந்தியாவை உருவாக்கும் என்றும் கருத்து தெரிவித்தார்.