சென்னை : ‘சமூக பாதுகாப்பு திட்டங்களை செயல்படுத்துவதில், ஆந்திர அரசை பார்த்து, தமிழக அரசு கற்றுக்கொள்ள வேண்டும். முதியோர் ஓய்வூதிய தொகையை, 4000 ரூபாயாக உயர்த்த வேண்டும்’ என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும் முதியோர் ஓய்வூதிய திட்டம், கைம்பெண்கள் ஓய்வூதிய திட்டம், நடப்பாண்டில் கூடுதலாக, 80,000 பேருக்கு வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்து பல மாதங்கள் ஆகின்றன. இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மக்களுக்கு சமூக பாதுகாப்பு வழங்குவதில், தமிழக அரசு செய்யும் தாமதம் கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் 1200 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. ஆனால், ஆந்திராவில் 4000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில், சமூக பாதுகாப்பு திட்டங்களுக்கு அரசு செலவழிக்கும் தொகை, 5337 கோடி ரூபாய்தான். இந்த திட்டங்களுக்காக, ஆந்திராவில் நடப்பாண்டுக்கு, 33,100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை விட ஆந்திராவில் மக்கள்தொகை குறைவு என்றாலும், தமிழகத்தை விட, 6 மடங்கு தொகையை ஆந்திர அரசு சமூக பாதுகாப்பு நிதியாக வழங்குகிறது. சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில், ஆந்திர மாநில அரசை பார்த்து, தமிழக அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.
தமிழக அரசு இனியும் தாமதிக்காமல், அறிவித்தபடி கூடுதலாக, 80,000 பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தை வழங்க வேண்டும்; உதவித் தொகையை, 4000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.