திருப்பூர்: திருப்பூரில், மாநில பா.ஜ., தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற இருந்த தேசியக்கொடி இருசக்கர வாகன பேரணிக்கு, போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர்.
தேசத்தின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் நேற்று, பா.ஜ., சார்பில் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்தப்படும்; மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்து பங்கேற்பார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, பேரணிக்கு போலீசார் திடீரென அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து நேற்று காலை, குமரன் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி மட்டும் நடந்தது. மாநில செயலர் மலர்க்கொடி, இளைஞர் அணி மாநில தலைவர் ரமேஷ் சிவா ஆகியோர் தலைமையில் கட்சியினர், குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ரமேஷ் சிவா நிருபர்களிடம் கூறியதாவது: நாட்டின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் தேசியக் கொடி ஏந்திச் செல்லும் நிகழ்ச்சிக்கு கூட தமிழக அரசு அனுமதிக்கவில்லை.
இதுபோன்ற அடக்குமுறைகளால் தேசப் பற்றையும், பா.ஜ.,வின் வளர்ச்சியையும் தடுக்கலாம் என இந்த அரசு நினைப்பதாகத் தெரிகிறது. தேசப்பற்று குறித்தெல்லாம் அவர்களுக்கு சிந்தனை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.