மும்பை: ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம், அதானி குழுமம் மற்றும் செபி மீது குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டதன் எதிரொலியாக, இன்று பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின அதானி குழுமத்தின் பங்குகள் 7 சதவீதம் அளவிற்கு வீழ்ச்சியை சந்தித்தன.
‘அதானி குழும முறைகேடு புகார் தொடர்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில், பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) தலைவர் மதாபி புரி புச் பங்குகளை வைத்திருக்கிறார். எனவே தான், அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி முறையாக செயல்படவில்லை’ என்று அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றஞ்சாட்டியது. ‘இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை; உள்நோக்கம் கொண்டவை’ என செபி தலைவர் மறுப்பு தெரிவித்துள்ளார். அதானி குழுமமும் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை, இன்றைய (ஆக.,12) பங்குச்சந்தையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல், இன்று பங்குச்சந்தை இறக்கத்துடன் துவங்கியது. காலை 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 436.45 புள்ளிகள் சரிந்து 79,269.45 புள்ளிகளாக வர்த்தகமாகின. நிப்டி 142.3 புள்ளிகள் சரிந்து 24,225.20 புள்ளிகளாக வர்த்தகமாகின.
ஹிண்டன்பா்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 7 சதவீதம் அளவிற்கு சரிவை சந்தித்தன. அந்த வகையில் அதானி என்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி எனர்ஜி உள்ளிட்ட பங்குகளின் விலை சரிவைக் கண்டுள்ளது.