தந்தை பெரியாரின் பிறந்த நாளான இன்று அவரது உருவ சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தியது, அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், சினிமாவில் தனது இறுதிப்படத்திற்கு தாயராகி வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டு வந்த விஜய், இடையில் கோட் என்ற படத்தை முடித்தார். சமீபத்தில் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது
இதனைத் தொடர்ந்து விஜய் தனது கடைசி படமாக எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனிடையே அரசியல் கட்சி தொடங்கிய விஜய், சமீபத்தில் தனது கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்த நிலையில், தனது முதல் அரசியல் மாநாட்டுக்காக தாயராகி வருகிறார். அதேபோல் அரசியல் தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாத செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் இன்று தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, விஜய் அவரின் திருவுருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வரும் நிலையில், இது குறித்து திருமாவளவன், விஜயை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்பு இளவல் நடிகர் விஜய் அவர்களைப் பாராட்டி வாழ்த்துகிறேன். தந்தை பெரியாரின் பிறந்தநாளான சமூகநீதி நாளில் அவரது திருவுருவச் சிலைக்கு மலர்த்தூவி வணக்கம் செலுத்தியிருப்பது அவர் விளிம்புநிலை மக்களுக்கானவர் என்பதையும் அவருக்கு சமத்துவமே இலக்கு என்பதையும் உணர்த்துகிறது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.