சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள, ‘கோட்’ படத்திற்கு பேனர் வைப்பதற்கு, தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
கட்சிக் கொடியை அறிமுகம் செய்துள்ள விஜய், கொள்கை விளக்க முதல் மாநாட்டை, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வரும் 22ல் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு அனுமதி வழங்க போலீசார் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர். இதனால், நீதிமன்றத்தை அணுக விஜய் தரப்பினர் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில், விஜய் நடித்துள்ள, ‘கோட்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இதற்காக, தமிழகம் முழுதும் அவரது கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், படம் வெளியாகவுள்ள திரையரங்குகள் மட்டுமின்றி, பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பேனர்கள் வைக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அமைச்சர்களின் மறைமுக நெருக்கடிகள் காரணமாக, பேனர் வைப்பதற்கு போலீசார் அனுமதி மறுத்து வருகின்றனர். அனுமதியின்றி வைக்கப்படுவதாகக் கூறி, அந்த பேனர்கள் இரவோடு இரவாக அகற்றப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, அக்கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், விஜய்க்கு தகவல்களை அனுப்பி வருகின்றனர். ‘படத் தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் உள்ளிட்டோருக்கு, இந்த விஷயத்தில் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. போலீஸ் அனுமதி பெற்றே பேனர்கள் வைக்க வேண்டும்’ என, மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.