சென்னையில் உள்ள உற்பத்தி ஆலையை மீண்டும் பயன்படுத்த போர்டு நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், அமெரிக்க நாட்டின் சிகாகோவில், ஃபோர்டு நிறுவனத்தின் உயர் அலுவலர்களை சந்தித்து தமிழ்நாட்டில் உற்பத்தியை மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக, ஃபோர்டு நிறுவனம் தமிழ்நாட்டில் மீண்டும் தனது உற்பத்தியை தொடங்குவதற்கு முன்வந்துள்ளது.
‘சென்னை மறைமலை நகரில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தின் ஆலையை மீண்டும் பயன்படுத்த விரும்புகிறோம். இதற்கான விருப்பக் கடிதத்தை தமிழ்நாடு அரசிடம் அளித்துள்ளோம்’ என ஃபோர்டு நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக, அந்நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு தலைவா் கே ஹார்ட் கூறுகையில், ‘தமிழ்நாடு அரசு எங்களுக்கு அளித்து வரும் ஆதரவுக்கு மிக்க நன்றி. கார்உற்பத்தித் துறையில் சா்வதேச சந்தைகளின் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்கான அனைத்து வசதிகளும், நுட்பங்களும், தொழில்நுட்பம் சார்ந்த வல்லுநா்களும் தமிழ்நாட்டில் இருக்கின்றனா். சென்னையில் உள்ள ஆலையை வேறுபல அம்சங்களுக்கும் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ந்து வருகிறோம்’, என்றார்.
மறைமலை நகரிலுள்ள ஃபோர்டு நிறுவன ஆலை மீண்டும் செயல்பாட்டுக்கு வரும் போது அடுத்த மூன்று ஆண்டுகளில் 2,500 முதல் 3 ஆயிரம் பேருக்கு கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்க்கப்படுகிறது.
அமெரிக்க நாட்டின் ஃபோர்டு மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்குச் சொந்தமான ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தொழிற்சாலை 1700 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் நிறுவப்பட்டு 1999ஆம் ஆண்டு அப்முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.
இத்தொழிற்சாலையில், ஃபோர்டு ஐகான், ஃபோர்டு என்டவர், ஃபோர்டு ப்யூஷன், ஃபோர்டு ஃபியஸ்டா ரகக் கார்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது.
ஃபோர்டு இந்தியா தொழிற்சாலையை 1,500 கோடி ரூபாய் கூடுதல் முதலீட்டில் விரிவாக்கம் செய்திடவும் புதிதாக என்ஜின் தயாரிப்புத் தொழிற்சாலை நிறுவிடவும் கருணாநிதி முன்னிலையில் கடந்த 2009ஆம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஃபோர்டு இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தோடு கையெழுத்தானது.
இதன்மூலம் அத்தொழிற்சாலையின் உற்பத்தித்திறன் இருமடங்காக உயர்ந்ததுடன், ஆண்டு ஒன்றுக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் கார் என்ஜின்களைத் தயாரிக்கவும் தொடங்கியது.
இந்நிலையில், நிறுவனம் 2021-ஆம் ஆண்டில் இருந்து தனது உற்பத்தியை நிறுத்திக் கொண்டது. மூன்று ஆண்டுகள் கழிந்த நிலையில், இப்போது மீண்டும் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்க விரும்புவதாக தமிழ்நாடு அரசிடம் கடிதம் அளித்துள்ளது.