பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும்; பள்ளியில் அமைச்சர் பேச்சு; நடவடிக்கை எடுக்கப்படுமா? – நாராயணன் திருப்பதி கேள்வி

மகாவிஷ்ணு என்பவர் சென்னையில் அரசுப் பள்ளியில் பேசிய கருத்துகள் சர்சையான நிலையில், முன்பிறவியில் பாவம் செய்தவர்களுக்கு தான் இந்த ஜென்மத்தில் ஆண் குழந்தை பிறக்கும் என்று பள்ளி நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சர்ச்சையாகி உள்ளது.

மகாவிஷ்ணு என்ற சொற்பொழிவாளர் சென்னையில் அசோக் நகர் அரசுப் பள்ளியில், மாணவிகளிடம் முன்பிறவியில் பாவம் செய்தவர்களுக்கு இந்த பிறவியில் தண்டனை கிடைக்கிறது என்றும் உடல் குறைபாடுகளுடன் பிறப்பது முன் பிறவியில் செய்த பாவம் என்று பேசியதும், இது குறித்து கேள்வி எழுப்பிய ஆசிரியரை அவமதிக்கும் விதமாகப் பேசிய விடீயோ சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு தரப்பினரின் கண்டனத்தைப் பெற்றது. இதையடுத்து, சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, அரசுப் பள்ளி நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி கலந்து கொண்டு பேசிய வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், அரக்கோணம் அரசு மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை வழங்கிய அமைச்சர் காந்தி மேடையில் பேசுகிறார். அப்போது, முன்பிறவியில் பாவம் செய்தவர்களுக்கு மகன்களாகவே பிறக்கும் என்றும், புண்ணியம் செய்தவர்களுக்கே மகள்களே பிறக்கும் என பேசினார். தமிழக மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு காவல்துறை அவரைக் கைது செய்துள்ள நிலையில், அமைச்சர் காந்தி பள்ளி நிகழ்ச்சியில் பாவம், புண்ணியம் குறித்து பேசியிருப்ப்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த நாராயணன் திருப்பதி குறிப்பிடுகையில், “முற்பிறவியில் பாவம் செய்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்கிறார் அமைச்சர் காந்தி, ஆண்களாய் பிறப்பது பாவமா? இது மூட நம்பிக்கை பேச்சு இல்லையா? அரசு பள்ளியில் இப்படி பேசியதால் தானே மகா விஷ்ணுவை கைது செய்து நடவடிக்கை எடுத்தீர்கள். உங்கள் ஏரியாவில் வந்து இப்படி பேசிவிட்டு சென்றிருக்கிற இந்த அமைச்சரை சும்மா விடுவீர்களா? கைது செய்ய வேண்டும் என வற்புறுத்த மாட்டீர்களா அன்பில் மகேஷ் அவர்களே?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியின் பதிவைத் தொடர்ந்து, சென்னை அசோக் நகர் பள்ளியில் பாவம், புண்ணியம் பற்றி பேசியதால் மகா விஷ்ணு கைது செய்யப்பட்டார். அதேபோல, தற்போது அமைச்சர் காந்தியும் பேசியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று பா.ஜ.க-வினர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *