சென்னை : சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள, இந்திய கடலோர காவல்படையின் அதிநவீன கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய கட்டடம், மண்டல கடல் மாசு நிவாரண மையம், புதுச்சேரியில் கடலோர காவல் படை விமான வளாகம் போன்றவற்றை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்து வைத்தார்.
சென்னை நேப்பியர் பாலம் அருகே, 26.10 கோடி ரூபாயில், இந்திய கடலோர காவல்படை கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மையத்தில், அதிநவீன கண்காணிப்பு குழு வாயிலாக, அவசர காலங்களில் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை விரைந்து மீட்கும் வகையில், தரைவழி மற்றும் செயற்கைக்கோள் வசதிகள் நிறுவப்பட்டுள்ளன.
இங்கு, கப்பல் போக்குவரத்தில் அதிக அனுபவம் பெற்ற, கடலோர காவல் படை பணியாளர்கள், 24 மணி நேரமும் பணியில் இருப்பர்.
சென்னை துறைமுக வளாகத்தில் முதல் முறையாக கடலோர மாநிலங்களை ஒட்டியுள்ள நீர்நிலைகளில் ஏற்படும் எண்ணெய், ரசாயன கசிவுகளை ஒருங்கிணைக்க, மண்டல கடல் மாசு நிவாரண மையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள கடலோர காவல்படை விமானப்படை வளாகம், கடல்சார் பாதுகாப்பை அதிகரிப்பதில் சிறந்து விளங்கும்.
இந்த விமானப்படை வளாகத்தில், ஹெலிகாப்டர் படை பிரிவினர் மற்றும் வான்வழி கண்காணிப்பு வாயிலாக, மீட்பு பணியை எளிதில் மேற்கொள்ள முடியும்.
விழாவில், இந்திய கடலோர காவல் படை கிழக்கு மண்டல ஐ.ஜி., டோனி மைக்கேல், ராணுவ தக் ஷின் பாரத் லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங், தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு, எம்.பி.,க்கள் தயாநிதி, கலாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.