திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கவுன்சிலர் எல்.ரெக்ஸ் தலைமையில் காங்கிரஸார் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது; பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி அமெரிக்க பயணத்தின் போது பா.ஜ.க ஆட்சியில் இந்தியாவின் நிலை குறித்து பல்வேறு உண்மை கருத்துக்களை கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் சஞ்சய் கெய்க்வாட் என்பவர் ராகுலின் நாக்கை அறுப்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசு வழங்குவதாகவும் கொலை மிரட்டல் விடுத்தும் ஆபாசமாகவும் பேசினார்.
அதனைத் தொடர்ந்து மறுநாள் மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜ.க எம்.பி அணில் பாண்டே நாக்கை அறுப்பதை விட சூடு வைப்பது நல்லது என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். மேலும், ரயில்வே மத்திய இணை மந்திரி ரவீந்திர சிங் பிட்டு பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் தர்மேந்திர சிங் உள்ளிட்டவர்களும் வெறுப்பை விதைத்துள்ளனர்.
எனவே, இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மேலும், அவதூறு பரப்பும் அந்த ஐந்து பேர்களுக்கும் சட்டப்படி தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு அளித்த போது மாவட்ட நிர்வாகிகள் ஜான் பிரிட்டோ, அபுதகிர், முஸ்தபா கோட்ட தலைவர்கள் எட்வின், அழகர், பிரியங்கா பட்டேல், தகவல் தொழில்நுட்ப பிரிவு கிழக்கு தொகுதி அமைப்பாளர் அரிசி கடை டேவிட், ரவிச்சந்திரன், மோதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.