‘காலை 8:45 மணிக்குள் 4.60 கோடி ஓட்டு பதிவானது எப்படி?’

சென்னை: ‘வாய்ஸ் ஆப் தமிழ்நாடு’ என்ற அமைப்பின் சார்பில், சென்னையில் நேற்று முன்தினம், ‘2024: திருடப்பட்ட தீர்ப்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

அதில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் பேசியதாவது:

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், மொத்தம் பதிவான ஓட்டுக்களை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை; சதவீதமாக தான் வெளியிட்டது. தேர்தலுக்கு முன் சிறப்பாக பிரசாரம் செய்யக்கூடிய, இரண்டு முதல்வர்களை கைது செய்தனர். பிரதான எதிர்க்கட்சியின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுத்த பின், தேர்தல் நியாயமாக நடப்பதாக தேர்தல் ஆணையம் சொல்கிறது.

ஓட்டுப்பதிவு நடந்த அன்று காலை 7:00 முதல் 8:45 மணிக்குள், குறிப்பிட்ட 79 தொகுதிகளில், 4.60 கோடி ஓட்டுக்கள் பதிவான அதிசயம், இந்த தேர்தலில் நடந்தது.

அந்த தொகுதிகள் தான் பா.ஜ., வெற்றிக்கு சாதகமாக அமைந்துள்ளன.

இத்தனைக்கும் பின், தேர்தல் ஆணையம் சுதந்திரமாக, தன்னிச்சையாக செயல்படுகிறது என்று கூறும்போது தான் சந்தேகம் வருகிறது.

தமிழகத்தில் ஒரே கட்டமாக, 39 தொகுதிகளில் தேர்தல் நடந்ததில், பா.ஜ., ஓட்டு சதவீதத்தை அதிகரித்துள்ளனர். ஆனால், வெற்றி பெறவில்லை. தமிழகத்தை விட குறைந்த தொகுதிகள் உடைய ராஜஸ்தான், கர்நாடகா, ம.பி., ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில், இரண்டு கட்டம், நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.

இது ஏன் என்பதுதான் கேள்வி. இதனை தேர்தல் கமிஷன் விளக்க வேண்டும்.

இந்த மாதிரியான தேர்தல் சந்தேகம் குறித்த கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு, லட்சக்கணக்கான தபால் கார்டுகளை ஜனாதிபதிக்கும், தேர்தல் ஆணையத்திற்கும் அனுப்பி வைக்க வேண்டும். தபால் கார்டுகளின் மூட்டைகளால், ஜனாதிபதி மாளிகை நிரம்பி வழிய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதே கருத்தை மையப்படுத்தி, கடந்த ஆக.,8ம் தேதி வெளியான முரசொலி பத்திரிகையில், ‘திருத்தப்பட்ட வெற்றி’ என்ற தலைப்பில் தலையங்கம் வெளியிடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *