டில்லி: டாக்காவில் இருந்து தலைநகர் டில்லிக்கு 205 பேர் விமானத்தில் வந்து இறங்கி உள்ளனர்.
எங்கே ஹசீனா?
அரசியல் ஸ்திரமற்ற தன்மை,வன்முறை காரணமாக பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். அவரது இருப்பிடம் தற்போது வரை ரகசியமாக வைக்கப்பட்டு இருக்கும் நிலையில், வங்கதேசத்தில் இன்னமும் அமைதி திரும்பவில்லை என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
205 பேர்
இந்நிலையில், டாக்காவில் இருந்து டில்லி விமான நிலையத்துக்கு ஏர் இந்தியா விமானத்தில் 199 பயணிகள், 6 குழந்தைகள் என மொத்தம் 205 பேர் இன்று அதிகாலை வந்து இறங்கி உள்ளனர். வங்கதேசத்தில் தற்போதுள்ள நிலைமை என்ன என்பது குறித்து அவர்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு உள்ளனர்.
இயல்பு நிலை
அர்பித் என்ற பயணி கூறுகையில், அங்கு தற்போது நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டில் உள்ளது என கூறலாம். நாளை முதல் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பலாம் என்று எதிர்பார்க்கிறோம். தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வங்கிகள், கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன.
பாதிப்பு இல்லை
விமான பயணத்தில் எந்த இடர்ப்பாடும் இல்லை, நான் எனது குடும்பத்தை பார்க்கவே வந்துள்ளேன். அங்குள்ள இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. அனைவரும் நலமுடன் உள்ளனர். ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துள்ளது அங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார்.
எத்தனை பேர் பலி?
மற்றொரு பயணி சௌரதீப் ராய் கூறியதாவது; அங்கே இப்போது எந்த பிரச்னையும் இல்லை, அனைத்தும் இயல்பாகவே உள்ளது. கலவரத்தின் போது ஏராளமான வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொல்லப்பட்டனர் என்றார்.