சென்னை: சென்னையில் வரும் ஆக., 30, 31 மற்றும் செப்., 1 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கும் பார்முலா கார் பந்தயத்தை எதிர்த்து, அ.தி.மு.க., சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி உள்ளது.
சென்னையில், வரும் ஆக., 30, 31 மற்றும் செப்., 1 ஆகிய தேதிகளில் ‘பார்முலா ரேஸிங் சர்க்யூட் எப் 4’ எனப்படும், கார் பந்தயம் நடக்க உள்ளது. சென்னை தீவுத்திடலில் துவங்கி 3.5 கி.மீ., துாரத்தைக் கடந்து, மீண்டும் தீவுத்திடலை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த துாரத்திற்குள், 19 திருப்பங்கள், பல்வேறு இரட்டை வளைவுகள், திடீர் உயரங்கள் உள்ளிட்டவற்றைக் கடந்து வர வேண்டும். 230 முதல் 250 கி.மீ., வரையிலான வேகத்தில் கார்கள் போட்டியிடும்.
அவசரமாக விசாரியுங்க!
இதற்கு அரசியல் கட்சியினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆடம்பர செலவு செய்து கார் பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், கார் பந்தயத்தை எதிர்த்து, அ.தி.மு.க., சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி உள்ளது. விரைவில் வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரிக்கும் எனக் கூறப்படுகிறது.