ஒலிம்பிக்குல ஒரு பதக்கம் உண்டா; இப்ப கார் பந்தயம் ஒண்ணுதான் கொறைச்சலா; சீமான் கேள்வி

சென்னை: ‘ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழகத்தில் இருந்து உருவாக்கத் திறனற்ற அரசு, கார் பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: ஆயிரம் ரூபாய் அரசுக்கு பார்முலா4 கார் பந்தயம் அவசியம்தானா? உரிய ஊதியம் கேட்டு மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள், போக்குவரத்துத்துறை ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினர் வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.

பழைய ஓய்வூதியம்

அவர்களைப் பணிநிரந்தரம் செய்யாமல், பதவி உயர்வு தராமல் தொகுப்பூதியம் கொடுக்கும் அளவிற்கே அரசின் நிதிநிலை மிக மோசமாக உள்ள நிலையில் கார் பந்தயம் தேவைதானா? அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாத அளவிற்கு நிதிநிலை மிக மோசமாக உள்ள நிலையில் ஆடம்பர கார் பந்தயம் தேவைதானா?

முதலீடு

மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் வாழவே முடியும் என்ற வறுமையான சூழலில் மக்களை வாட வைத்துவிட்டு வீண் ஆடம்பர கார் பந்தயம் யாருடைய விருப்பத்திற்கிணங்க நடத்துகிறீர்கள்? தி.மு.க., அரசு சாதித்தது என்ன? தமிழகத்திற்கும்,தமிழ் மக்களுக்கும் ஏற்பட்ட ஒரு நன்மையைச் சொல்ல முடியுமா? கார் பந்தயம் நடத்தியதால் தீர்ந்த மக்கள் பிரச்சனைகள் எத்தனை? ஈர்த்த முதலீடு எவ்வளவு?

ஆயிரம் ரூபாய் அரசு

தமிழகத்துக்கு கிடைத்த வேலைவாய்ப்புகள் எத்தனை? ஒலிம்பிக்கில் ஒரே ஒரு பதக்கம் வெல்லும் அளவிற்குத் தகுதியான ஒரு வீரரைக்கூட தமிழகத்தில் இருந்து உருவாக்கத் திறனற்ற திமுக அரசு, கார் பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை மேம்பட்டு விடுமா? பொழுதுபோக்கிற்காக ஆடம்பர கார் பந்தயம் நடத்தி மகிழும் முடிவை ஆயிரம் ரூபாய் திமுக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *