மனைவி, மகளுக்கு கொலை மிரட்டல்: ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு பாதுகாப்பு

சென்னை: மகள், மனைவியை கடத்தி கொன்று விடுவோம் என, மிரட்டல் கடிதம் வந்துள்ளதால், ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங், 52. சென்னை பெரம்பூரில் ஜூலை, 5ல் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, ரவுடிகள், வழக்கறிஞர்கள் உள்பட, 21 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் சில ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கூட்டாளிகள், 17 பேர் ரகசிய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட பெரம்பூர் வேணுகோபால சாமி தெருவில் தான், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில அலுவலகம் உள்ளது. இதன் முகவரிக்கு, செங்கல்பட்டு மாவட்டம், படூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த சதீஷ்,39 என்பவர் எழுதியது போல, கடிதம் ஒன்று வந்துள்ளது. இதை ஆம்ஸ்ட்ராங் உதவியாளர் செல்வம் வாங்கி படித்துள்ளார்.

கடிதத்தில், ‘ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்துள்ள என் நண்பனை உடனடியாக விடுவிக்க வேண்டும். மறுத்தால் ஆம்ஸ்ட்ராங் மகள், மனைவியை கடத்தி கொன்று விடுவோம். அடுத்தடுத்து ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தில் உள்ள நபர்களை வெடிகுண்டுகள் வீசி கொல்வோம்’ என, கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொலை மிரட்டல் கடிதத்துடன், செம்பியம் போலீசில், செல்வம் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கொலை மிரட்டல் கடிதத்தில் இருந்த முகவரிக்கு சென்று சதீஷிடம் போலீசார் விசாரித்தனர்.

அவரோ, கடிதத்திற்கும், தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. தன் பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். போலீசார் அவரை தற்போது விடுவித்து, அழைக்கும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி அனுப்பி உள்ளனர். கொலை மிரட்டல் காரணமாக, ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி வசித்து வரும், சென்னை அயனாவரத்தில் உள்ள குடியிருப்புக்கு, சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *