விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகளிரணி சார்பில், அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.
வி.சி.க தலைவர் திருமாவளவன் புதன்கிழமை (செப்டம்பர் 11) விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, “அக்டோபர் 2-ம் தேதி மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு ஒன்றை நடத்துகிறோம். மது மற்றும் போதைப்பொருளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பது காலங்காலமாக ஒலித்து வருகிற ஒரு போர்க்குரலாகும். காந்தியடிகள் அதற்காக பல அறவைழி போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.
அவருடைய மாணவராக தந்தை பெரியார் தன்னுடைய சொந்த தோட்டத்தில் இருந்த தென்னை மரங்களை வெட்டி எறிந்தார். அவருடைய சகோதரிகள், துணைவியார் மது ஒழிப்பு போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி இருக்கிறார்கள். இதெல்லாம் தமிழகத்தில் ஏற்கனவே நடந்திருக்கிற வரலாறு. புரட்சியாளர் அம்பேத்கர் அன்றைய பம்பாய் சட்டமன்றத்தில் மதுவிலக்கு எவ்வளவு முக்கியமானது என்று பேசிய வரலாறு பதிவு இருக்கிறது. அம்பேத்கர் பௌத்தத்தை தழுவிய போது பௌத்தர்களாக ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய உறுதிமொழிகள் 22, அந்த உறுதி மொழிகளில் மதுவை தொடக்கூடாது என்பதும் ஒன்று. எனவே, நாங்கள் கொள்கை ஆசான்களாக ஏற்றுக் கொண்டிருக்கிற புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்றவர்கள் முன்னெடுத்த போராட்டத்தை வெகுமக்கள் போராட்டமாக நாங்கள் முன்னெடுக்கிறோம்.
தமிழகத்தில் இந்திய மனித உரிமை கட்சியின் தலைவர், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு முன்னாள் தலைவர் இளையபெருமாள் அவர்கள் இந்த மது ஒழிப்புக்கான களத்தில் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார். மதுவிலக்கு ரத்து செய்த காலத்தில் சட்டமன்றத்தில் எதிர்த்து பேசி இருக்கிறார், விமர்சனம் செய்திருக்கிறார். ஆகவே, மது ஒழிப்பு போராட்டம் என்பது தொடர்ச்சியாக தமிழகத்தில் நடந்து வருகிற ஒன்று. மக்கள் நலக் கூட்டணியில் நாங்கள் இருந்த காலத்தில், சசிபெருமாள் முன்னெடுத்த மது ஒழிப்பு போராட்டத்தை நாங்கள் அனைவரும் முழுங்கி இருக்கிறோம். சசிபெருமாள் அதற்காகவே தன் உயிரை மாய்த்துக் கொண்டார். மது ஒழிப்பு போராளியாக தியாகம் செய்திருக்கிறார். அப்படிப்பட்ட அந்த போராளிகளின் வரிசையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பை போதைப்பொருள் ஒழிப்பை முன்னிறுத்தி மகளிர்கள் பெரும்பங்கு வைக்க வேண்டும், அவர்கள்தான் உயர்த்திப் பிடிக்க வேண்டும், அவர்கள்தான் உறத்து முழங்க வேண்டும் என்கிற வகையில் இதை நாங்கள் மகளிர் மாநாடாக நடத்துகிறோம்.
இதில் லட்சக்கணக்கான மகளிர்களை ஒருங்கிணைக்க திட்டமிட்டு இருக்கிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த மகளிர்கள் மட்டுமின்றி ஜனநாயக சக்திகளாக உள்ள அனைவரும், கட்சி சார்பற்ற ஜனநாயக சக்திகள் அனைவரும் இந்த அறப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். கட்சிகளைக் கடந்து அனைத்து வரம்புகளையும் கடந்து அனைவரும் ஒரே குரலில் ஒருமித்த குரலில் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் இது எங்கள் அறைகூவல்.
கட்சி அரசியல் என்பது வேறு சமூகம் சார்ந்த மக்கள் நலன் சார்ந்த நிலைப்பாடுகள் என்பது வேறு. 24 மணி நேரமும் நாம் கட்சி சார்ந்த நிலைப்பாடுகள் எடுக்க முடியாது. தேர்தல் நேரத்தில் தேர்தல் நிலைப்பாடு அவ்வளவுதான் மற்ற நேரங்களில் நாம் மக்கள் நலன் சார்ந்து தான் எல்லோரோடும் சேர்ந்து செயல்பட வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டாம் என்று எந்த குரலும் இல்லை.
மதுவை ஒழிக்க வேண்டும் என்று தான் எல்லா கட்சிகளும் எல்லா தலைவர்களும் சொல்கிறார்கள், எல்லோரும் ஒருமித்து ஒரு நிலைப்பாடு எடுக்கிற போது மதுக்கடைகளை மூடுவதில் என்ன சிக்கல் இருக்கிறது?
தி.மு.க-வுக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் கருத்து, அ.தி.மு.க-வுக்கும் மது ஒழிப்பில் உடன்பாடு உண்டு இடதுசாரிகளுக்கும் அதே நிலைப்பாடுதான். விடுதலை சிறுத்தைகளும் அதைத்தான் பேசுகிறோம். அரசு மதுபான கடைகளை படு ஜோராக நடத்துவது தேவையில்லை. அதை ஏன் படிப்படியாக குறைக்க கூடாது, அதை ஏன் நாம் முற்றாக ஒழிக்க கூடாது, பிற மாநிலங்களுக்கு நாம் ஏன் முன்னோடியாக இருக்கக் கூடாது பிற மாநிலங்களில் எல்லாம் மதுபானம் வியாபாரம் செய்யப்படுகிறது என்கிற காரணத்தை சொல்லத் தேவையில்லை. நாம் அதற்கு முன்னோடியாக இருக்கலாம்.
இன்றைக்கு பீகாரிலே மதுவிலக்கு நடைமுறையில் இருக்கிறது, குஜராத்தில் மதுவிலக்கு நடைமுறையில் இருக்கிறது என்கிறபோது ஏன் அதை தமிழ்நாட்டிலே நடைமுறைப்படுத்த முடியாது. மாநில சுயாட்சிக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு இருக்கிறது என்று பெருமையாக சொல்கிறோம். மொழி உரிமைப் போராட்டத்தில் தமிழ்நாடு முதல் மாநிலமாக இருக்கிறது என்று பெருமையாக சொல்கிறோம். வடவர் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் முதன்மையாக இருப்பது தமிழ்நாடு என்று பெருமையாக சொல்கிறோம், இந்தி திணிப்பு எதிர்ப்பில், நீட் எதிர்ப்பில் தமிழ்நாடு முதன்மையாக இருக்கிறது என்று சொல்கிறோம். இப்படி எல்லாவற்றிலும் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கிற தமிழ்நாடு மதுவிலக்கிலும் முன்னாடியாக ஏன் இருக்கக் கூடாது என்ற கேள்வியை விடுதலை சிறுத்தைகள் கட்சி எழுப்புகிறது. அதன்படி, தான் இந்த கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கும் முடிச்சு போடக்கூடாது. மதுவிலக்கு மாநாட்டை கூட்டணிக் கணக்குடன் இணைத்துப் பார்க்க வேண்டாம்.” என்று கூறினார்.
அப்போது, வி.சி.க நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க-வை அழைப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், அ.தி.மு.க-வும் இந்த மாநாட்டிற்கு வரலாம், அ.தி.மு.க மட்டுமல்ல. மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கும் எந்த கட்சியாக இருந்தாலும் இந்த போராட்டத்துக்கு வரலாம் என கூறினார். மேலும், “மதுவை ஒழிக்க மட்டுமே அறைகூவல் விடுக்கிறேன். இது 2026 பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி அல்ல” என்று திருமாவளவன் கூறினார்.
தொடர்ந்து பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “மது ஒழிப்பில் உடன்பாடு உள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. நல்லச்சாராயத்தால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல. சாராயம் என்றாலே அது கேடுதான். மக்கள் பிரச்னைகளுக்காக சாதிய சக்திகளை தவிர எந்த சக்திகளோடும் இணைய தயாராக இருக்கிறோம்.” என்று கூறினார்.
மேலும், “மதுக்கடைகளின் வருமானத்தைக் கொண்டு ஆட்சி நடத்துவது ஏற்புடையதல்ல. ஹிந்தி, நீட் எதிர்ப்பில் தமிழகம் முதன்மையாக இருக்கும்போது மது ஒழிப்பிலும் பிற மாநிலங்களுக்கு தமிழகம் முதன்மையாக இருக்க வேண்டும். மதுக்கடைகளை மூடுவதற்கான காலக்கெடுவை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.” என்று திருமாவளவன் கூறினார்.
மது ஒழிப்பு மாநாட்டிற்கு விஜயை அழைப்பீர்களா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், “விஜய்க்கும் மது ஒழிப்பில் உடன்பாடு இருக்கும். அவரும் கட்டாயம் வி.சி.க மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாம்” என்று திருமாவளவன் கூறினார்.
தி.மு.க கூட்டணியில் உள்ள வி.சி.க தாங்கள் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க-விற்கும் த.வெ.க தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.