வி.சி.க தலைவர் திருமாவளவன் அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படும் என அறிவித்த நிலையில், தி.மு.க-வை மிரட்ட மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார் திருமாவளவன் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சனம் செய்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மகளிரணி சார்பில், அக்டோபர் 2-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மது மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு மாநாடு நடைபெறவுள்ளது என்று திருமாவளவன் புதன்கிழமை அறிவித்தார்.
விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், வி.சி.க நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில், அ.தி.மு.க மற்றும் புதியதாக கட்சி தொடங்கியுள்ள விஜய்யும் பங்கேற்கலாம் என்று கூறினார். மேலும், பா.ஜ.க மற்றும் பா.ம.க-வுக்கு அழைப்பு விடுக்கவில்லை; அவர்களுடன் ஒருபோதும் இணையமாட்டோம் என்று திருமாவளவன் கூறினார்.
இந்நிலையில், வி.சி.க தலைவர் திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு அறிவித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜ.க-வைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தி.மு.க-வை மிரட்ட மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார் திருமாவளவன் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், “தி.மு.க-வை மிரட்ட திருமாவளவன் மது ஒழிப்பு மாநாடு நடத்துகிறார்; திருமாவளவனுக்கு தி.மு.க-விடம் எதாவது கோரிக்கை இருக்கலாம். மது ஒழிப்பு மாநாட்டை தி.மு.க-வை மிரட்டுவதற்கான யுக்தியாக பார்க்கிறேன். திருமாவளவன் ஒரு சாதி தலைவர், ஒட்டுமொத்த பட்டியலினத்திற்கான தலைவர் அல்ல” என்று எல். முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.