திருவனந்தபுரம்: பத்திரிகை, பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக்கூடாது என கீழமை நீதிமன்றங்களுக்கு கேரளா ஐகோர்ட் உத்தரவிட்டது.
கேரளா, ஆலுவா நகராட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் மலையாள மனோரமா நாளிதழுக்கு எதிராக, குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, மலையாள மனோரமா நாளிதழ் சார்பில், கேரளா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.பதரூதீன் பிறப்பித்துள்ள உத்தரவு:
நான்காவது தூண்
இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக பத்திரிகைகள் விளங்குகின்றன. நாட்டின் அன்றாட நிகழ்வுகள், குறித்த செய்திகளை பொதுமக்களுக்கு தெரிவிப்பதில் பத்திரிகை மற்றும் ஊடகங்களின் பங்கு அளப்பரியது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 499 மற்றும் பிரிவு 500-ன் கீழ், பத்திரிகையாளர்களுக்கு எதிராக தேவையற்ற அவதூறு வழக்குகளை தொடர்வது மக்களின் உரிமையையும் மீறும் செயல்.
வழக்கு ரத்து
பத்திரிகை, பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக்கூடாது. குற்றவியல் நீதிமன்றங்கள் இனிவரும் காலங்களில் விழிப்புடன் செயல்பட வேண்டும். இந்த வழக்கில் பெண் நகராட்சி கவுன்சிலர் தொடர்பாக செய்தி வெளியிட்டதற்காக மலையாள மனோரமா மீது நிலுவையில் உள்ள அவதூறு வழக்கு தேவையற்ற ஒன்று. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார். இதனால் அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டது.