தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியானது குறிப்பிட்ட வாக்கு சதவீதம் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து தேர்தல்களிலும் தனித்து போட்டியிட்டு தோல்வியை சந்தித்து வருகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தல் பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியானது 3 அல்லது 4-வது இடங்களை பிடித்தது.
இதன் மூலம் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் வெகுவாக அதிகரித்து வந்தது. இந்நிலையில் கட்சியில் இருந்து பல்வேறு தொண்டர்கள் கட்சியின் நிர்வாகம் சரியில்லை என்ற குற்றச்சாட்டை பல நாட்களாக வைத்து வருகின்றனர். ஒரு சிலர் கட்சியில் இருந்து விலகி சென்ற வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், திருச்சி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பிரபு திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், “கடந்த 15 ஆண்டுகளாக உழைப்பு, நேரம், வருவாய் என எங்களால் முடிந்த அனைத்தையும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சிக்காக கொடுத்தோம். அதற்கு உரிய மதிப்பில்லை.
எதற்கெடுத்தாலும் என் கட்சி, என் கட்சி என சீமான் பேசுகிறார்.சீமான் மட்டுமே நாம் தமிழர் கட்சியை வளர்த்தாரா? ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் எங்கே போவது? தமிழ் தேசியம், தலைவர் பிரபாகரனை நேசித்து இந்த கட்சிக்கு வந்தோம்.
தற்போது, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகம் சரியில்லை. கட்சி அலுவலகம் ஆயிரக்கணக்கான நபர்களின் உழைப்பில் வந்தது. அதை தனி நபரின் பெயரில் பத்திரம் செய்துள்ளனர். கட்சிக்கென சட்ட, திட்டம் ஏதும் இல்லை.15 ஆண்டுகளாக உழைத்தவர்களை விடுத்து, யாரோ ஒருவரை கொண்டு வந்து இவர்தான் வேட்பாளர் என சொல்வது எந்த விதத்தில் நியாயம்? என்று பிரபு கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், திருச்சி மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பிரபு இவ்வாறு பேசியது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.