தி.மு.க.வில் நடைபெற்றது பவள விழா அல்ல, உதயநிதிக்கு முடி சூட்டுவதற்கான ஆரம்ப விழா, ஒரு நல்ல நாள் பார்த்துதான் உதயநிதி துணை முதல்வராகப் பதவியேற்பார் என நான் சவால் விடுகிறேன் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், “ஒரே நாடு, ஒரே தேர்தல், மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்துள்ளது. இது நல்ல திட்டம், மக்களுக்கான திட்டம் இது. இந்த முடிவு பொத்தாம் பொதுவாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கக் கூடியது.
தமிழக முதலமைச்சர் வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்ப்பதாக சொல்கிறார்கள். சாம்சங் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். அதைப் பற்றி முதலமைச்சர் கண்டு கொள்ளாதது ஏன்?
சகோதரர் அன்பில் மகேஷ் பகுதியில் அரசு கொடுக்கும் முட்டை, வெளி கடைகளில் விற்பனை செய்யப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. மகாவிஷ்ணுவை கைது செய்தது போன்று எப்போது முட்டையை தூக்கி சென்றவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும்?
தி.மு.க கூட்டணியில் பிரச்னை காரணமாக திருமாவளவன் மாநாடு நடத்துகிறார். திருமாவளவன் எதிர்பார்த்தது நடக்கவில்லை. முதலமைச்சரைப் பார்த்து திருமாவளவன் பயந்து வந்துள்ளார்.
உதயநிதி துணை முதல்-அமைச்சர் பதவி ஏற்கப் போகிறார் என்று திடீர் வதந்தி கிளம்புகிறது, தற்போது நல்ல நாள் இல்லாத காரணத்தினால் பதவி ஏற்க மாட்டார்கள். காரணம் இவர்கள் பகுத்தறிவாளர்கள். உதயநிதி பதவி ஏற்கும் நாள் முகூர்த்த நாளாக தான் இருக்கும் என்று நான் சவால் விடுகிறேன்.
அண்ணாமலை படிக்கச் சென்று இருக்கிறார். பா.ஜ.க-வில் பிரச்னை இல்லை. ஜி.எஸ்.டி .பற்றி தவறான கருத்து பரவி வருகிறது. நடிகர் விஜய் ஒற்றை சாயம் பூசி கொண்டு செல்லக் கூடாது. பொதுவான அரசியலை விஜய் முன்னெடுக்க வேண்டும்” என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.