ஹிந்துக்கள் தாக்கப்படுவதை நம் நாட்டவர் வேடிக்கை பார்ப்பதா? ‘இண்டி’ கூட்டணிக்கு எதிராக பலரும் போர்க்கொடி

சென்னை:’வங்கதேசத்தில் ஹிந்துக்கள் குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது உள்நாட்டு பிரச்னை என்று கருதக்கூடாது. வேடிக்கை பார்த்தால் நாம் மஹாபாரதமாக இருக்க முடியாது’ என, ஹிந்து அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

ஹிந்துக்கள் மீதான தாக்குதலை, ‘இண்டி’ கூட்டணி வேடிக்கை பார்ப்பதாகவும், பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு:

ஹிந்துக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், வங்கதேசத்தின் வெறும் உள்நாட்டு பிரச்னை அல்ல. நம் அண்டை நாட்டில் உள்ள சிறுபான்மையினருக்காக, நாம் உறுதியாக நின்று, விரைந்து செயல்படாவிட்டால் பாரதம், மஹாபாரதமாக இருக்க முடியாது.

இந்த நாட்டின் அங்கமாக இருந்த அந்நாடு, துரதிர்ஷ்டவசமாக அண்டை நாடாகி விட்டது. ஆனால், நிஜத்தில் இந்த நாகரிகத்தைச் சேர்ந்த இம்மக்களை, இத்தகைய அதிர்ச்சியான கொடுமைகளில் இருந்து பாதுகாப்பது நம் பொறுப்பு.

மதத் தீவிரவாதம் நம் அன்பான பாரதத்தை, ஒருபோதும் ஆட்டிப் படைக்காது என்பதை நாம் உறுதி செய்வோம்.

பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்:

வங்கதேசத்தில் வசிக்கும் ஒரு கோஷ்டியினர் அங்கு வசிக்கும், ஒரு கோடிக்கும் அதிகமான ஹிந்துக்களை குறிவைத்து, வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹிந்து கோவில்கள், ஹிந்துக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன. பல்வேறு கோவில்கள் எரிக்கப்படுகின்றன.

‘இஸ்கான்’ கோவில் தாக்கப்பட்டு, அங்குள்ள பகவத் கீதை உள்ளிட்ட புனித நுால்கள் எரிக்கப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.

பாலஸ்தீனத்தில் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் என்றதும், இந்தியாவில் உள்ள தி.மு.க., – காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் கண்டன குரல் எழுப்பின.

ஆனால், வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுவது குறித்தும், வழிபாட்டு தலங்கள் எரிக்கப்படுவது குறித்தும், அக்கட்சிகள் மவுனம் சாதிக்கின்றன. இதுதான் இண்டி கூட்டணியின் மதசார்பின்மை.

புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி:

வங்கதேசத்தில் ஆட்சியை ராணுவம் கைப்பற்றி உள்ளது. முக்கிய சில நாடுகளின் கைங்கரியம் இல்லாமல், இந்த சம்பவம் நடைபெறாது. கடந்த 50 ஆண்டு காலமாக, இந்தியாவின் கிழக்கு பகுதியில், எல்லை பிரச்னை அல்லது நதி நீர் பிரச்னை என்றால், பேசி தீர்க்கும் சூழல் இருந்தது.

அதை முற்றிலும் மாற்றும் நோக்கத்தோடு, ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளது. இதில், இந்தியா நிச்சயம் கவனமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இருப்பினும், மேற்கில் அதிகமாகவும், வடக்கில் ஓரளவு போர் மேகம் சூழ்ந்திருந்த இந்திய எல்லையில், தற்போது கிழக்கு பகுதியிலும் போர் மேகங்கள் உருவாகும் அசாதாரண சூழல் காணப்படுகிறது.

இது, எல்லையோர பிரச்னை மட்டும் அல்ல; வேறு கோணங்களிலும் இந்திய மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. நம் அரசியல்வாதிகளும், குறுகிய கண்ணோட்டங்களை ஒதுக்கிவைத்து விட்டு, நம்மை காட்டிலும், தேசம் தான் பெரிது என்ற உணர்வோடு ஒருங்கிணைந்து நிற்க வேண்டும்.

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்:

இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து, ஹிந்துக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து, இந்திரா வெற்றி பெற்று, பாகிஸ்தானிடம் இருந்து வாங்கி தந்த வங்கதேசத்தில், இன்று ஹிந்துக்கள் கொல்லப்படுகின்றனர்.

எங்கெல்லாம் ஹிந்துக்கள் சிறுபான்மையினராகி வருகின்றனரோ, அங்கெல்லாம் ஹிந்துக்களை கொன்று குவிக்கின்றனர்.

இந்தியாவையும் பிரிக்கத்தான், ‘இண்டி’ கூட்டணி அமைந்துள்ளது. இதை இந்தியாவில் இருக்கும் ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக நடுநிலை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல், இந்தியாவில் ஹிந்துக்கள் அனாதையாக நிற்கும் காலம் வந்து விடும்.

இவ்வாறு பலரும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *