முதுநிலை ‘நீட்’ தேர்வு வினாத்தாள் விற்பனை: பரவும் தகவலால் அதிர்ச்சி

சென்னை:முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ வினாத்தாள், 70,000 ரூபாய்க்கு விற்பனைக்கு இருப்பதாக, டெலிகிராம் செயலில் பரவும் தகவல், தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தேர்வை, தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் நடத்துகிறது. இதில், வரும் 11ம் தேதி நடக்கும் தேர்வில், தமிழகத்தில் இருந்து, 25,000க்கும் மேற்பட்டோர் என, நாடு முழுதும், 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக, சமூக வலைதளமான, டெலிகிராம் செயலியில் தகவல் பரவி வருகிறது.

டெலிகிராமில், 26,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட, ‘பிஜி நீட் லீக்டு மெட்டீரியல்’ என்ற குழுவில், முதுநிலை நீட் வினாத்தாள், 70,000 ரூபாய்க்கு விற்பனைக்கு இருப்பதாகவும்; இதற்கு, 35,000 ரூபாய் முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் தேர்வு வினாத்தாள், ‘லீக்’ ஆன நிலையில், முதுநிலை தேர்வு வினாத்தாள் விற்பனைக்கு இருப்பதாக வரும் தகவலால், தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

மத்திய அரசு மறுப்பு

மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பில், ‘முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான, ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிந்ததாக சமூக வலைதளங்களில் வரும் தகவல்கள் தவறானவை. தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தால், இன்னும் வினாத்தாள் தயாரிக்கப்படவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *