சென்னை:”விவசாயத்திற்கு கடந்த ஆண்டை விட, மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கி உள்ளது,” என, ஒடிசா மாநில துணை முதல்வர் கனக்வர்தன் சிங் தியோ தெரிவித்தார்.
சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில், ‘பசி இல்லாத உலகம்’ என்ற தலைப்பில், இரு நாள் கருத்தரங்கம் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களின் கண்காட்சி, சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் அரங்கத்தில் நேற்று நடந்தது.
ஒடிசா மாநில துணை முதல்வர் கனக்வர்தன் சிங் தியோ கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
உற்பத்தி அதிகரிப்பு
அவர் பேசியதாவது:
ஒடிசா மாநிலத்தில், விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனால் அங்கு, விவசாயப் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது.
மத்திய அரசு, விவசாயத்திற்கு கடந்த ஆண்டைவிட அதிக நிதி ஒதுக்கி உள்ளது. சிறுதானியம் உற்பத்தியை அதிகரிக்க, சிறப்பு திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தி வருகிறது. இதனால், விவசாயிகளின் வாழ்க்கை மேம்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடகா மாநில வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ணபைர கவுடா பேசியதாவது:
கர்நாடகா மாநிலத்தில் விவசாய உற்பத்தி பொருட்கள் அதிகரிக்க, எம்.எஸ்.சுவாமிநாதன் சிந்தனை மிகவும் பயன் அளித்தது. அவரின் ஆராய்ச்சி அறிக்கைகள், இந்தியா முழுதும் பயன்பட்டன.
விவசாய உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், விவசாயிகள் வாழ்க்கை தரம் பின்தங்கி உள்ளது. அதற்கு ஏற்ப திட்டங்கள் வகுப்பது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் பேசுகையில், ”நவீன தொழில்நுட்பங்கள், விவசாயத்திற்கு பெரும் பயன் அளிக்கின்றன. பலர் அதை பயன்படுத்தி, உற்பத்தியை அதிகரித்து வருகின்றனர்.
சிக்கல் எழும்
புதிய தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்தும்போது, சில சிக்கல்களும் எழுகின்றன. அதை கடந்த விவசாயமும், விவசாயிகளும் வளர்ச்சி பெறுவர்,” என்றார்.
இந்நிகழ்ச்சியில், ‘தி இந்து’ பத்திரிகை குழும தலைவர் என்.ராம், எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் சவுமியா சுவாமிநாதன், செயல் இயக்குனர் ஹரிஹரன், விவசாயம் மற்றும் கிராமப் புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி தலைவர் ஷாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.