‘வக்பு வாரிய சட்ட திருத்தம் யாருக்கும் எதிரானது அல்ல’

சென்னை: ‘வக்பு வாரிய சட்ட திருத்தம், அனைத்து சமூக மக்கள் நலனையும் உள்ளடக்கிய சட்டமாகவே உள்ளது’ என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

வக்பு வாரிய சட்டத்தில், மத்திய அரசு திருத்தங்கள் கொண்டு வர உள்ளது. இதுகுறித்து, பார்லிமென்ட் விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்துள்ளார்.

பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளும், மத்திய அமைச்சரை சந்தித்து முழு ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால், வழக்கம்போல் எதிர்க்கட்சிகள் உண்மையை அறியாமல், பொதுமக்களை திசை திருப்ப, சட்ட திருத்தத்தை எதிர்க்கின்றன.

இந்தியாவில், அதிக நிலம் வைத்திருப்பதில் ராணுவம், ரயில்வேக்கு அடுத்து வக்பு வாரியம் தான் உள்ளது. மொத்தம், 9.40 லட்சம் ஏக்கர் நிலம் வக்பு வாரியத்திடம் உள்ளது. சமீபத்தில் திருச்சியில் உள்ள திருச்செந்துறை கிராமம் முழுதும், வக்பு வாரியத்தின் சொத்து என கூறிவிட்டனர்.

ஆனால், திருச்செந்துறையில் உள்ள சுந்தரேஸ்வரர் கோவில், 1,500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. அப்படி இருக்கும்போது, திருச்செந்துறை கிராமம் எப்படி வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக இருக்க முடியும்? திருச்சி, வேலுார் உட்பட தமிழகம் முழுதும் பல்வேறு இடங்களில் இந்த பிரச்னை நிலவுகிறது.

குறிப்பிட்ட நிலத்தின்உரிமையாளர் அந்த நிலத்தை விற்கும்போது, அது வக்பு வாரிய சொத்து என்று அறிவிக்கப்பட்டால், நிலத்தின் உரிமையாளர் வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்று பெற்று, பதிவாளர் அலுவலகத்தில் வழங்கினால் மட்டுமே நிலத்தை விற்க முடியும் நிலை தற்போது உள்ளது.

இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்தப் பிரச்னைகள், வக்பு வாரிய சட்ட திருத்தம் வாயிலாக சரி செய்யப்படும். இதனால், சமூகத்தில் அமைதி நிலவும்; இஸ்லாமியர்களுக்கு நன்மை கிடைக்கும்.

இந்த சட்ட திருத்தம், யாருக்கும் எதிரானது அல்ல. அதனால், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் வழக்கம் போல இந்த விஷயத்திலும் திசை திருப்பல் நாடகத்தை அரங்கேற்றக் கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *