விநாயகர் சதுர்த்தி தொடர்பாகப் பள்ளிகளில் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 7 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய நாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பள்ளிகளில் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பாக திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், தவறான சுற்றறிக்கை அனுப்பிய அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள் தொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பாக விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் வாயிலாக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் (தென்மண்டலம்) வாயிலாக பெறப்படும் அறிவுறுத்தல்கள் பொதுமக்களுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் செய்தி வெளியீடு வாயிலாக வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையானது, விநாயகர் சதுர்த்தி விழா ஏற்பாட்டாளர்கள், அமைப்பாளர்கள், சிலை செய்வோர் மற்றும் பொதுமக்களுக்கு மட்டுமே உரிய அறிவுறுத்தல்கள் ஆகும்.
மேற்காணும் சூழ்நிலையில், ஒரு சில மாவட்டங்களில் தவறான புரிதலின் அடிப்படையில் பள்ளிகளுக்கு மேற்கூறிய விழா தொடர்பாக அறிவுறுத்தல், உறுதிமொழி குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு பள்ளிகளுக்கு வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்கள், அரசின் ஆணைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதால், ஒரு சில மாவட்டங்களில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த அறிவுறுத்தல்கள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றது. மேலும், இவ்வாறு தவறான சுற்றறிக்கை அனுப்பியதற்கு பொறுப்பான அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.