பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கொலையாளிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்திருந்த ஜாமினை, ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.
பெங்களூரு ஆர்.ஆர்.நகரில் வசித்தவர் கவுரி லங்கேஷ். பத்திரிகையாளரான இவரை, கடந்த 2017 செப்டம்பர் 5ம் தேதி, வீட்டின் முன்பு வைத்து ஒரு கும்பல், துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது. இந்த வழக்கில் விஜயபுராவை சேர்ந்த பரசுராம் வாக்மோர், தார்வாடின் கணேஷ் மிஷ்கின், மோகன் நாயக் உட்பட 17 பேரை சிறப்பு புலனாய்வு குழு கைது செய்து, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் மோகன் நாயக்கிற்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இதை எதிர்த்து கவுரியின் சகோதரி கவிதா, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பேலா திரிவேதி, சதீஷ் சந்திரா சர்மா விசாரிக்கின்றனர். நேற்று முன்தினம் மனு மீது விசாரணை நடந்தது.
100 சாட்சிகள்
அரசு சார்பில் ஆஜரான வக்கீல்கள் சித்தார்த் லுத்ரா, அவிஷ்கர் சிங்வி, ரகுபதி ஆகியோர் வாதாடுகையில், ‘கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக, இதுவரை 137 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு உள்ளன. மேலும் 100 சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டி உள்ளது. ஜாமினில் வெளியே இருந்தாலும், மோகன் நாயக் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்’ என்றனர். மனுதாரர் தரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தது.
ஒத்துழைப்பு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறுகையில், ‘குற்றம் சாட்டப்பட்டவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றாலோ, ஜாமின் விதிகளை மீறி செயல்பட்டாலோ அவர் மீதான ஜாமினை ரத்து செய்யலாம். ஆனால் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கிறார். ‘ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்ததையும், சாட்சிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலும், கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது.
‘இதனால், உயர் நீதிமன்ற உத்தரவில் நாங்கள் தலையிட முடியாது. விசாரணை நீதிமன்றம் விரைவாக விசாரணை நடத்த வேண்டும். விசாரணையை முடிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றனர்.