டில்லி: தற்போதைய சூழலில் லோக்சபா தேர்தல் நடைபெற்று இருந்தால், பா.ஜ.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக ‘லேட்டஸ்ட்’ கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்று, தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியைப் பிடித்தது. 400 இடங்களுக்கு மேல் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்த பா.ஜ.,வுக்கு வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 63 இடங்கள் குறைவு.
அதேபோல, காங்கிரசும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிகப்படியான இடங்களை பெற்றது. 2014ல் 44 இடங்களையும், 2019ல் 52 இடங்களையும் வென்றிருந்த காங்கிரஸ், 2024 லோக்சபா தேர்தலில் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன்மூலம், 10 ஆண்டுகளுக்குப் பிறகு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.
கருத்துக்கணிப்பு
இந்த நிலையில், தேசத்தின் மனநிலை என்ற தலைப்பில் இந்தியா டுடே நிறுவனம், ஜுலை 15ம் தேதி முதல் ஆக., 10ம் தேதி வரையில் கருத்துக்கணிப்பை நடத்தியது. அதன்படி, ஆக.,22ல் லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், பா.ஜ., கூட்டணிக்கு 335 தொகுதிகளும், இண்டியா கூட்டணிக்கு 166 தொகுதிகளும் கிடைத்திருக்கும் என்று தெரியவந்துள்ளது.
பா.ஜ.,வுக்கு ஆதரவு
லோக்சபா தேர்தலில் பெற்றதை விட பா.ஜ.,வுக்கு 4 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்; ஏப்ரல் – மே மாதங்களில் நடந்த தேர்தலில் 240 தொகுதிகளை வென்றிருந்த பா.ஜ., தற்போது 244 தொகுதிகளை கைப்பற்றி இருக்கும் என்கிறது கணிப்பு.
மேலும், பா.ஜ.,வின் வாக்கு சதவீதம் 36.56 ஆக தேர்தலில் குறைந்திருந்தது. தற்போது தேர்தலை நடத்தினால், அது 38 சதவீதமாக அதிகரிக்கும் என்றும், ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 43.7 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்றும் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ்
அதேபோல, காங்கிரசுக்கு 99 இடங்களில் இருந்து 106 இடங்களாக கிடைத்திருக்க வாய்ப்புள்ளதாகவும் சர்வேயில் தெரிய வந்துள்ளது. 2019ல் 19.46 சதவீதம் இருந்த காங்கிரஸ் வாக்கு சதவீதம், 2024ல் நடந்த தேர்தலில் 21.20 சதவீதமாக அதிகரித்தது. அதுவே, ஆக.,22ல் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால், காங்கிரசுக்கு 25.4 சதவீதம் வாக்குகள் கிடைத்திருக்கும் என்றும் கணிப்பில் தெரிய வந்துள்ளது.