திருவனந்தபுரம்: கேரள திரையுலகில் சினிமா பிரபலங்கள் மீது குவிந்த பாலியல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பிரபல நடிகர் சித்திக் நடிகர் சங்க பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
வித்தியாசமான கதைப்பாணியில் சினிமாவை வடிவமைக்கும் கேரள சினிமாவுக்கு என்று எப்போதும் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. காரணம், ஒரு படத்தின் முதல் 20 நிமிடக்காட்சிகளுக்கும் எஞ்சிய காட்சிகளுக்கும் இருக்கும் வித்தியாசம் தான்.
இந்நிலையில், மல்லுவுட்டான மலையாள திரையுலகில் நடிகைகள், பெண் கலைஞர்களுக்கு நிகழும் பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பெற்ற முன்னாள் நீதிபதி ஹேமா கமிட்டி ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது. 4 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு தற்போது ரிலீஸ் ஆகி உள்ள இந்த அறிக்கையில் கேரள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, பாலியல் அட்ஜஸ்மெண்ட்க்காக துன்புறுத்தல், அத்துமீறல்கள் நடப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
அறிக்கை தொடர்பான விவாதங்கள் ஒருபக்கம் இருக்க, பிரபல நடிகர்கள் ரஞ்சித், சித்திக் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் வெடித்து கிளம்ப ஆரம்பித்தன. இதையடுத்து, மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சித்திக் ராஜினாமா செய்துள்ளார். பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இந்த விவரத்தை வெளியிட்டு இருக்கிறார்.