சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடந்த வழக்கில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு இன்று ஜாமீன் வழங்கி தீர்ப்பினை வழங்கியுள்ளது. இதனையடுத்து, 15 மாதங்களுக்குப் பின்னர் செந்தில் பாலாஜி பிணையில் விடுதலையாக உள்ளார்.
இந்நிலையில், சிறையில் இருந்து 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியே வர இருப்பதால் தி.மு.க-வினர் உற்சாகம் அடைந்துள்ளனர். இதனையொட்டி தமிழகம் முழுவதும் தி.மு.க-வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.
செந்தில் பாலாஜியின் சொந்த மாவட்டமான கரூர் மற்றும் பொறுப்பு அமைச்சராக இருந்த கோவையில் தி.மு.க நிர்வாகிகள் கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்தும், சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் “பூட்டிய இரும்பு கூட்டின் கதவு திறந்தது! சிறுத்தையே வெளியே வா!” என்ற வாசகங்களுடன் கோவை நகரின் பல்வேறு இடங்களில் தி.மு.க வினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். கோவையில் ரயில் நிலையம், டவுன்ஹால் , அவிநாசி மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க இளைஞரணி சார்பில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது