அரசியலுக்கு வர இளைஞர்கள் ஆர்வம்: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி உற்சாகம்

புதுடில்லி: ‘அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்கள் அரசியலில் கால் வைக்கும் போது தான் வம்ச அரசியல் ஒழியும்’ என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

Advertisement

‛மன் கி பாத் ‘ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: விண்வெளித்துறையில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. 21ம் நூற்றாண்டில் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க, பல நிகழ்வுகள் நடந்து வருகின்றன. உதாரணமாக, ஆகஸ்ட் 23ம் தேதி நாட்டு மக்கள் முதல் தேசிய விண்வெளி தினத்தை கொண்டாடினர். இது மீண்டும் சந்திரயான்-3 வெற்றியை கொண்டாட வழி வகுக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி நிலவின் தெற்குப் பகுதியில் சந்திரயான்-3 விண்கலம் தரையிறங்கிய இடத்தை சிவசக்தி என்று பெயரிட்டு அழைக்கிறோம். பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஆர்வம்

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்த பிறகு, அரசியல் பின்னணி இல்லாத ஒரு லட்சம் இளைஞர்களை அரசியல் கட்சியில் இணையுமாறு வலியுறுத்தினேன். என்னுடைய இந்த கருத்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது அரசியலில் ஈடுபட இளைஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள இளைஞர்களிடமிருந்து எனக்கு கடிதங்கள் வந்துள்ளன. சமூக வலைதளங்களிலும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. மக்கள் எனக்கு பலவிதமான ஆலோசனைகளை அனுப்பியுள்ளனர்.

வம்ச அரசியல்

‘சிலர் தங்கள் தாத்தா அல்லது பெற்றோரிடம் அரசியல் பாரம்பரியம் இல்லாததால் அவர்களால் அரசியலுக்கு வரமுடியவில்லை என்றும், வம்ச அரசியல் ஒழிக்கப்பட வேண்டும்’ எனவும் தெரிவித்துள்ளனர். அரசியல் பின்னணி இல்லாத இளைஞர்களும் அரசியலில் முன்னேற முடியும் என்று நம்புகிறேன். அவர்களின் அனுபவமும், ஆர்வமும் நாட்டுக்கு பயனுள்ளதாக இருக்கும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இளம் தொழில் முனைவோரின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *