கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், விடுதிகளை முடக்கும் அரசாணையை ரத்து செய்யும் வரை போராட்டம் அ.தி.மு.க., அறிவிப்பு

திருமங்கலம்:’கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், விடுதிகளை முடக்கும் அரசாணையை தி.மு.க., அரசு ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும்’ என, அ.தி.மு.க., அறிவித்துள்ளது.

கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் மற்றும் விடுதிகளை முடக்க முயற்சிக்கும் தி.மு.க., அரசை கண்டித்தும், பள்ளி கல்வித்துறையோடு இணைக்கும் முயற்சிகளை கைவிட வலியுறுத்தியும் அ.தி.மு.க., மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் சார்பில் மதுரை மாவட்டம், செக்கானுாரணியில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது.

பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை வகித்து பேசுகையில், ”எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே முக்குலத்தோர் சமுதாயத்திற்கு அ.தி.மு.க., ஆதரவளித்து வருகிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எதுவும் செய்யவில்லை. இதை தற்போதைய முதல்வர் ஸ்டாலினிடமும் சொல்லியிருப்பார் போல. அதனால் ஸ்டாலினும் இந்த சமுதாயத்திற்கு எதிராக செயல்படுகிறார்.

”கள்ளர் பள்ளியை பள்ளிக்கல்வித்துறையுடன் சேர்க்கும் திட்டமே இல்லை என்று வார்த்தையில் கூறுகின்றனர். இது என்ன வேத வாக்கா. அரசாணை எண் 40ஐ ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்,” என்றார்.

அறிவிக்கப்படாத போர்

துணை பொதுச்செயலர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில், ”மக்கள் மீது தி.மு.க., ஆட்சி ஒரு அறிவிக்கப்படாத போரை தொடுத்துள்ளது. கருணாநிதி காலத்திலிருந்தே முக்குலத்தோர் சமுதாயத்தின் மீது இனம் புரியாத வெறுப்பு உள்ளது. முக்குலத்தோர் சமுதாயத்தை மட்டுமல்ல, எல்லா சமுதாயத்தையும் வஞ்சிக்கின்றனர். இதற்கு தீர்வு அ.தி.மு.க., ஆட்சி அமைவது தான்,” என்றார்.

போராட்டம் வெற்றி பெறும்


முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசுகையில், ”முக்குலத்தோர் சமுதாயத்தை காக்க நான் இருக்கிறேன் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறி வருகிறார். அ.தி.மு.க., எப்போதும் இந்த சமுதாயத்திற்கு உறுதுணையாக நிற்கும். தி.மு.க., அரசு கள்ளர் பள்ளியின் வரலாற்றை தெரிந்துக் கொள்ள வேண்டும். அதன் வரலாறை தெரியாத ஒரு பொம்மை முதல்வராக உள்ளார் ஸ்டாலின். தமிழக அரசு இதுவரை கள்ளர் பள்ளிகளை பள்ளி கல்வித்துறை மூலமாக இணைக்கும் நடவடிக்கை இல்லை என்று சொன்னாலும், விரைவில் எடுக்கும். பழனிசாமி அறிவித்த இந்த போராட்டம் வெற்றி பெற்று இருக்கிறது,” என்றார்.

பொய் சொல்லும் தி.மு.க.,


எம்.எல்.ஏ., ராஜன் செல்லப்பா பேசுகையில், ”ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, படித்த காலத்திலேயே வித்தியாசமான குணம் கொண்டவர். தனக்கென்று தனி கொள்கை கொண்டவர். அவரது குணத்திற்கு தி.மு.க., அரசு ஒத்து போகிறது. இந்த போராட்டத்தை பழனிசாமி அறிவிக்காமல் இருந்தால் தி.மு.க.,வினர் நிறைய பொய் சொல்லியிருப்பர்,” என்றார்.

உப்புசப்பு இல்லாத அறிக்கை


முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேசுகையில், ”உண்ணாவிரத்தை திசை திருப்ப தி.மு.க., அரசு உப்பு சப்பு இல்லாமல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. வெற்று அறிக்கை கொடுத்து மக்களை ஏமாற்றுகிறது. வரலாற்றை அழித்து நிர்வாக மாற்றத்தை அரசு ஏற்படுத்துகிறது. இதைத்தான் கண்டிக்கிறோம். அரசாணை எண் 40 மூலம் பிற்பட்டோர் மிகவும் பிற்போட்டோர், கள்ளர் கல்வி நிறுவனங்களை இன்றைக்கு பள்ளிக் கல்வித் துறையில் இணைக்கிறது. இதை கண்டித்து தான் உண்ணாவிரதம் நடக்கிறது,” என்றார்.

இதற்கிடையே, அ.தி.மு.க., ஆட்சியில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கியதை கண்டித்தும், உண்ணாவிரதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் செக்கானுாரணியில் சீர் மரபினர் நலச்சங்கம் சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் துரைமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நிர்வாகிகள் தவமணிதேவி, ராமகிருஷ்ணன் உட்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *