கோவை : கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு தேவையான நிலத்தை, 99 ஆண்டு குத்தகைக்கு இலவசமாக தருவதாக, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது.
கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய, நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது; இம்மாத இறுதிக்குள் இவ்வேலைகளை இறுதி செய்ய, மாவட்ட நிர்வாகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், நிலம் கையகப்படுத்த மட்டும் இதுவரை, 2,100 கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது.
தனியார் பராமரிப்பு
வழக்கமாக, விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு கையகப்படுத்தும் நிலங்கள், இந்திய விமான நிலைய ஆணையத்துக்கோ அல்லது மத்திய அரசுக்கோ இலவசமாக மாற்றிக் கொடுப்பது வழக்கம்.
விமான நிலைய பராமரிப்பை தனியார் வசம் மத்திய அரசு ஒப்படைக்க இருப்பதாக தகவல் பரவியதால், நிதியமைச்சராக தியாகராஜன் இருந்தபோது, இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு நிலத்தை ஒப்படைக்க, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.
நிபந்தனைகள் என்னென்ன?
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலத்தை, குத்தகை அடிப்படையில் மட்டுமே தமிழக அரசு கொடுக்கும். இதற்கு முன் விமான நிலையங்கள் ஆணையம் அல்லது மத்திய அரசுக்கு நிலத்தின் உரிமையை மாற்றித் தந்தது போல், தற்போது தர முடியாது.
இந்திய விமான நிலைய ஆணையம் (ஏ.ஏ.ஐ.,) கோவை விமான நிலையத்தை இயக்கும் வரை மட்டுமே, குறைந்தபட்ச குத்தகைத் தொகை நிர்ணயிக்கப்படும்.
கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலம் இலவசமாக தர ஒப்புதலளித்து கடிதம் அனுப்பியது தமிழக அரசு
கோயம்புத்தூர்
கோவை விமான நிலையத்தை தனியாரின் பராமரிப்புக்கு ஒப்படைத்தால், தமிழக அரசுக்கான குத்தகைத் தொகை நிலத்தின் அன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப அதிகரிக்கப்படும் அல்லது நிலத்தின் அன்றைய சந்தை மதிப்புக்கு ஏற்ப, பங்குகளை தமிழக அரசு பெறும்.
தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல், நிலத்தை தனியார் பராமரிப்பாளருக்கு உள்குத்தகைக்கு விடுவதற்கான உரிமை வழங்க இயலாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதுவே, விமான நிலைய விரிவாக்கத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. இருந்தாலும், கையகப்படுத்திய நிலங்களில் பணிகளை துவக்க அனுமதி அளிக்கும் செயல்முறை உத்தரவு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.
அப்போதும்கூட, அந்நிலங்களை குத்தகை அடிப்படையில் வழங்குவதாக, நிபந்தனை விதித்திருந்ததால், விமான நிலைய ஆணையம் ஏற்கவில்லை.
அடுத்தக்கட்ட நகர்வு
‘சிவில் ஏவியேஷன் கொள்கை 2016’ன்படி, எவ்வித வில்லங்கமும் இன்றி நிலம் கொடுக்க வேண்டும். இதை தெளிவுபடுத்துவதற்காக, விமான நிலைய ஆணைய தலைவர், தமிழகம் வந்து தலைமை செயலரை நேரில் சந்தித்தார்.
அச்சமயத்தில் லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்பு வந்ததால், அடுத்தக்கட்ட நகர்வுகள் தள்ளிப்போனது. தற்போது அரசு துறை அதிகாரிகள் மட்டத்தில் பேசி, விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலம் ஒப்படைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு, சிக்கல்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
அதில், கையகப்படுத்திய நிலங்கள், 99 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில், இலவசமாக வழங்கப்படும். எதிர்காலத்தில் விமான நிலையத்தை பராமரிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைத்தால், வருவாயில் ஒரு பகுதியை தமிழக அரசுக்கு பகிர்ந்து கொடுப்பது தொடர்பாக பரிசீலிக்க வேண்டும் என்கிற கோரிக்கை, தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான கடிதத்தை, கடந்த ஆக., 16ம் தேதி தமிழக அரசின் தலைமை செயலர், இந்திய விமான நிலைய ஆணையத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறார். இதன் காரணமாக, கோவை விமான நிலைய விரிவாக்கப் பிரச்னைக்கு சுமுக முடிவு கிடைத்திருக்கிறது. இனி, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டியது மத்திய அரசின் முக்கிய பொறுப்பு.