சென்னை : தமிழகத்தில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வரும், காஜாமொய்தீன் கூட்டாளிகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கடலுார் மாவட்டம் கொள்ளுமேடு பகுதியை சேர்ந்த காஜாமொய்தீன்; ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர். அவர் தலைமையில் தான், 2014ல், திருவள்ளூர் மாவட்ட ஹிந்து முன்னணி நிர்வாகி சுரேஷ்குமார் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, டில்லியில் பதுங்கி இருந்த காஜாமொய்தீனை, என்.ஐ.ஏ., என்ற, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரை விடுவிக்க வேண்டும் என்பதற்காகவே, 2020ல், கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனை சாவடியில் சிறப்பு எஸ்.ஐ., வில்சன் கொல்லப்பட்டார். கடந்த மார்ச் 1ல், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ராமேஸ்வரம் கபே ேஹாட்டலில் குண்டுகளை வெடிக்கச் செய்த முசாவீர் ஹுசைன் ஷாஜிப், அப்துல் மதீன் தாஹா ஆகியோரும், காஜாமொய்தீனால் பயங்கரவாதிகளாக மாற்றப்பட்டவர்கள் தான்.
தற்போதும், காஜாமொய்தீன் கூட்டாளிகள், தமிழகத்தின் பல பகுதிகளுக்கு சென்று, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வருவதால், அவர்களை என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
காஜாமொய்தீன் தன் கூட்டாளி முகமது பாஷாவுடன் சேர்ந்து, ‘அல் ஹிந்து டிரஸ்ட்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளார். அதில், கோவையை சேர்ந்த ஷிஹாபுதீன் உள்ளிட்டோர் நிர்வாகிகளாக உள்ளனர். வெளிநாட்டில் இருந்து ஷிஹாபுதீன் வாங்கி கொடுத்த துப்பாக்கியால் தான் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஷிஹாபுதீன், காஜாமொய்தீன் கைது செய்யப்பட்டாலும், அவர்களின் கூட்டாளிகள், ‘டார்க்நெட்’ என்ற இணையதளத்தை பயன்படுத்தி, பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்து வருவது தெரியவந்துள்ளது.
அவர்களின் சதி திட்டத்தை முறியடிக்கும் வகையில், நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், கடலுார், நெய்வேலி உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.