சேலம்: கிருஷ்ணகிரி பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட, போலி என்.சி.சி., பயிற்சியாளர் சிவராமன், சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் தனியார் பள்ளியில், இரு வாரங்களுக்கு முன் நடத்தப்பட்ட போலி என்.சி.சி., முகாமில், 12 வயது மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, போலி பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான சிவராமன், 35, கைது செய்யப்பட்டார். மேலும் ஒரு பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த புகாரில், சிவராமன் மீது மேலும் ஒரு போக்சோ வழக்கை போலீசார் நேற்று பதிந்தனர்.
மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான சிவராமன், தன் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், ஜூலை, 11ல் எலி பேஸ்ட் தின்று, தற்கொலைக்கு முயன்று, மருத்துவ சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளார். தற்போது, பாலியல் பலாத்கார வழக்கில், தான் கைதாக போகிறோம் என்ற பயத்தில், கைதாவதற்கு ஒரு நாள் முன், மீண்டும் எலி பேஸ்ட் தின்று தற்கொலைக்கு முயற்சித்தார்.
சிவராமனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மருத்துவர்கள் பரிந்துரைப்படி, மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அவரை, அனுப்பி வைத்தனர். அங்கு ஐ.சி.யு.,வில் அனுமதிக்கப்பட்டுள்ள சிவராமனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, சிவராமன் இன்று அதிகாலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தந்தையும் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி அருகே பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி உயிரிழந்த சிவராமனின் தந்தை, காவேரிப்பட்டினம் அருகே குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.