பாட்னா: பக்தர்களின் வசதிக்காக அயோத்தி மற்றும் சிதாமர்ஹி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
சீதை கோயில்
பீகார் மாநிலம் சிதாமர்ஹி மாவட்டம் சீதை பிறந்த இடமாக கருதப்படுகிறது. எனவே, அங்கு அமைந்துள்ள புனர தாம் ஜான்கி மந்தீர் ஆலயத்தை மேம்படுத்துவதற்காக ரூ.72.47 கோடி மாநில அரசால் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி முதல்வர் நிதிஷ்குமாரால் தொடங்கி வைக்கப்பட்டது.
பீகார் சுற்றுலாத்துறையின் மூலம் சாலைகள், கட்டுமானம் எனப் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஹிந்து பக்தர்களின் வசதிக்காக ராமர் கோயில் அமைந்துள்ள உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தி மற்றும் பீகாரில் சீதையின் கோயில் அமைந்துள்ள சிதாமர்ஹி இடையே மற்றொரு வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
வந்தே பாரத் ரயில் சேவையை அறிமுகம் செய்வதன் மூலம் ராமர் மற்றும் சீதை கோயில்களை ஹிந்து பக்தர்கள் எளிதில் தரிசிக்க முடியும் என்றும், இதனால், பக்தர்களின் வருகையும் அதிகரிக்கும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே, ராமர் மற்றும் சீதை கோயில்களை இணைக்கும் பணிகளை மத்திய அரசு ஏற்கனவே மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அதே கையோடு, வந்தே பாரத் ரயில் சேவையை வழங்குவது தொடர்பாக ரயில்வே துறைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.