புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு: உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க மேல்முறையீடு

புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு தொடர்பான வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற்ற நிலையில், அதை எதிர்த்து அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கடந்த அ.தி.மு.க அரசின் போது ஒரு உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அரசினுடைய உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து அப்போதைய அ.தி.மு.க சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து தமிழகத்தில் தி.மு.க ஆட்சி அமைந்த நிலையில் புதிய தலைமைச்செயலக கட்டட முறைகேடு தொடர்பாக அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை வாபஸ் பெற அனுமதி கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் எதிர் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற திபதிகள், வழக்கை வாபஸ் பெற தமிழக அரசு முடிவெடுத்துள்ள நிலையில், வழக்கை நடத்தும்படி நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது என கூறி வழக்கு வாபஸ் பெறப்பட்டதை ஏற்றுக் கொண்டனர்.

வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் இடையீட்டு மனுதாரரின் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லாததால் ஜெயவர்தன் மனுவை முடித்துவைத்தும் சென்னை உயர்நீதிமன்றம தீர்ப்பளித்தது.

இந்நிலையில், புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு வழக்கை திரும்பப் பெற அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற  உத்தரவுக்கு எதிராக அ.தி.மு.க. முன்னாள் எம்.பி ஜெயவர்தன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்துள்ளார்.  அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொள்ளாமல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

எனவே, புதிய தலைமைச் செயலக கட்டட முறைகேடு புகார் தொடர்பான மேல்முறையீடு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என ஜெயவர்தன் மனுவில்  கூறியுள்ளார். இந்த மேல்முறையீடு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *