அ.தி.மு.க., ஒருங்கிணைவதை தடுக்கவே ‘மாஜி’க்கள் மீது வழக்கு: பன்னீர்செல்வம்

சென்னை: ‘அ.தி.மு.க., ஒருங்கிணைவதை தடுக்கவே, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது, தி.மு.க., அரசு வழக்கு பதிந்துள்ளது’ என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சொத்து வரி, மின் கட்டணம், வழிகாட்டி மதிப்பு, வாகன வரி, பதிவு கட்டணம், முத்திரைத் தாள் கட்டண உயர்வுகளை மக்கள் மீது கூடுதலாக சுமத்தி, தமிழக மக்களின் அதிருப்தியை, தி.மு.க., அரசு சந்தித்து வருகிறது. லோக்சபா தேர்தலில், தன் சாதனைகளால் தி.மு.க., வெற்றி பெறவில்லை; மாறாக, எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின்மையால் வெற்றி பெற்றது.

ஒன்றுபட்ட அ.தி.மு.க., என்ற முயற்சியில், முன்னாள் அமைச்சர் வேலுமணி ஈடுபட்டுள்ளார். அவரை தொடர்ந்து, வைத்திலிங்கம், 2025-ல் அ.தி.மு.க., ஒன்றிணையும் என கூறியிருந்தார். அ.தி.மு.க., ஒன்றிணைந்து விடுமோ என்கிற அச்சத்தில் வேலுமணி மீது, தி.மு.க., அரசு இரண்டு நாட்களுக்கு முன் வழக்குப்பதிவு செய்தது. தற்போது, வைத்திலிங்கம் மீது வழக்கு பதிந்துள்ளது.

அனைத்து துறைகளிலும் தமிழகம் சீரழிந்து வருவதையும், தி.மு.க.,வின் மேல் உள்ள அதிருப்தியையும் மூடிமறைக்க, வைத்திலிங்கம் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை; அரசியல் காழ்ப்புணர்ச்சியின் உச்சக்கட்டம். இந்த வழக்கு சட்டரீதியாக எதிர்கொள்ளப்படும்.

அ.தி.மு.க.,வை ஒன்றிணையவிடாமல் தடுத்து, அதன் வாயிலாக, 2026 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என முதல்வர் ஸ்டாலின் கனவு காண்கிறார். அவருடைய கனவு நிச்சயம் பலிக்காது.

அ.தி.மு.க., ஒன்றுபடும்; வீறுகொண்டு எழும்; ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும். இருள் நீங்கி ஒளி தோன்றும் நாள் வெகு துாரத்தில் இல்லை.

இவ்வாறு பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *