திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சியில் தி.மு.க., மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 4 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் தவிர தி.மு.க., கூட்டணி பெரும்பான்மையாக உள்ளது. தி.மு.க., கவுன்சிலர் சரவணன் கடந்த முறை மேயராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு பணிகளை முறையாக ஒதுக்கி தரவில்லை எனக் கூறி தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்பிரச்னையில் கட்சி தலைமை உத்தரவுப்படி அண்மையில் அவர் ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 04) திருநெல்வேலி மாநகராட்சியில் தி.மு.க., மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி இருந்தால் தேர்தலை நடத்தி, பிற்பகலில் முடிவை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தி.மு.க., மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிட்டு என்ற ராமகிருஷ்ணன் சைவ வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் 25வது வார்டு தி.மு.க., கவுன்சிலராக உள்ளார். 3 முறை கவுன்சிலராக இருந்தவர். கிட்டுவிற்கு தி.மு.க., மற்றும் கவுன்சிலர்கள் வட்டாரங்களில் ஆதரவு உள்ளது.
துணை மேயர் கே.ஆர்.ராஜு மேயராகும் முயற்சி மேற்கொண்டார். சென்னையில் சில தினங்கள் காத்திருந்தார். இருப்பினும் துணைமேயரை மேயராக தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் இல்லாததால் அவர் முயற்சிகளை கைவிட்டு விட்டார்.