திண்டுக்கல்: கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, திண்டுக்கல்லில் பிரியாணி கடைக்காரர் முஜிபுர் ரகுமான் தனது ஓட்டலில் மொய்விருந்து நடத்தி அதன் மூலம் கிடைத்த தொகையை கேரளா அரசுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் பேகம்பூர் பகுதியை சேர்ந்தவர் முஜிபுர் ரகுமான். இவர் இங்கு இரு இடங்களில் ‘முஜிப்பிரியாணி’ கடைநடத்துகிறார். வயநாடு மக்களுக்கு உதவ திண்டுக்கல் ரவுண்ட்ரோடு பகுதி ஓட்டலில் மொய்விருந்துக்கு ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தொடங்கிய விருந்து இரவு 11:00 மணி வரை நடந்தது. முதல் கட்டமாக 700 பேருக்கு பிரியாணி, இனிப்பு, சிக்கன் 65, முட்டை, தோசை,இட்லி என 10 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டது.
ஆயிரம் பேருக்கு மேல் விருந்தில் பங்கேற்றனர். கூட்டத்தை கருதி மேலும் 300 பேருக்கு உணவு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
விருந்தில் பங்கேற்ற மக்கள் சாப்பிட்ட இலையின் கீழ் ரூ.500 முதல் ரூ.2500 வரை மொய் வைத்தனர். சிறுவர்கள் கூட தங்கள் சேமிப்புநாணயங்களை கொடுத்து விட்டு சென்றனர். மொய் விருந்து மூலம் ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் கிடைத்தது.
முஜிபுர் ரகுமான் கூறியதாவது: இயற்கை பேரிடர் ஏற்படும் நேரத்தில் மக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மதம், இனம், மொழி பாகுபாடு இல்லாமல் நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்.
அதற்கான முயற்சியாகதான் ஓட்டல் மூலமாக மொய்விருந்தை ஏற்பாடு செய்தேன். இதில் கிடைத்த தொகையை திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மூலம் கேரளா அரசிடம் ஒப்படைக்க இருக்கிறோம். தொடர்ந்து நம்மால் முடிந்த உதவிகளை செய்வோம் என்றார்.