பழநி கோயிலில் முதல்வர் ஸ்டாலின் வழிபடுவாரா: எச்.ராஜா கேள்வி

பழநி: ”பழநி முருகன் கோயிலில் தரிசனம் செய்த பின் முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்ள வேண்டும்” என பா.ஜ., மூத்த தலைவர் எச். ராஜா கூறினார்.

பழநியில் அவர் கூறியதாவது: வங்கதேசத்தில் 20 சதவீத ஹிந்துக்கள் இருந்தனர். தற்போது 7 சதவீதம் உள்ளனர்.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசிய காங்., கட்சியினர் தற்போது வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறைக்கு எதிராக பேசவில்லை.

பா.ஜ., மட்டுமே உலக ஹிந்துக்களுக்கு ஆதரவாக உள்ளது. கோயிலில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். பழநியில் நடக்க உள்ள முத்தமிழ் முருகன் மாநாட்டில் முதல்வர் கலந்து கொண்டால் முதலில் முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்டு நெற்றியில் திருநீறு அணிந்து கலந்து கொள்ள வேண்டும்.

சினிமா உலகை முதல்வர் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல் கோயில்களை தி.மு.க., மயமாக்க அமைச்சர் சேகர்பாபு முயற்சி செய்வதை கண்டிக்கிறோம். தி.மு.க., வில் ஏற்பட்டுள்ள பிளவு மேயர் தேர்வில் வெளிப்பட்டு வருகிறது.

கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்க வேண்டும். கோயில் பணத்தில் கல்லுாரிகள் கட்டி வருகின்றனர். கோயில் நிதியை கோயில் பணி தவிர மற்ற பணிகளுக்கு பயன்படுத்த கூடாது.

கோயில் கும்பாபிஷேகங்கள் பக்தர்கள் நன்கொடையில் நடைபெறுகிறது. ஹிந்து விரோத தீயசக்திகளிடம் ஹிந்து கோயில்களை காப்பாற்ற வேண்டும். பழநி கோசாலை மாடுகள் பராமரிப்பு இன்றி பரிதாபமாக இருந்தது. அதை வெளிப்படுத்திய என்மீது வழக்கு பதிந்தனர் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *