ரஜினிகாந்த் சார் விமான நிலையம் செல்லும்போது அவரை வழிமறிந்த்து துணை முதல்வர் பற்றி கேள்வி கேட்கிறார்கள். நானே பயந்து விட்டேன் ரஜினி சார் பாவம் என்று நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக பேசியுள்ளார்.
கடந்த 2021 சட்டசபை தேர்தலில், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு திரைப்படங்களில் நடித்திருந்தார். ஒரு கட்டத்தில் கைவசம் இருந்த படங்களை முடித்த அவர், திடீரென அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது மாமன்னன் படம் தான் தனது கடைசி படம் என்று அறிவித்திருந்தார்.
தற்போது விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியில் இருக்கும் உதயநிதி விரைவில், துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் விமான நிலையம் செல்லும்போது செய்தியாளர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் அவரிடம் துணை முதல்வர் குறித்து கேள்வி எழுப்பியது. இதற்கு ரஜினிகாந்த் அரசியல் கேள்வி வேண்டாம் என்று பதில் அளித்தாக தகவல்கள் வெளியானது.
இது குறித்து தற்போது, சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று காலை, யூடியூப்பில் ஒரு வீடியோவை பார்த்து ஷாக் ஆகிவிட்டேன். அதில் உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா? ரஜினிகாந்த் ஆவேசம் என்று இருந்தது. துணை முதல்வர் குறித்து அறிவிப்பு முழுவதும் முதல்வரிடம் தான் இருக்கிறது. ஆனால் ரோட்டில் போற வரவங்க எல்லார்கிட்டயும், கைக்கை நீட்டி உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா உங்கள் கருத்து என்ன என்று கேட்கிறார்கள்.
ரஜினிகாந்த் சார் பாவம். படப்பிடிப்பிற்காக வெளியூர் செல்ல விமான நிலையம் வருகிறார். அவரிடமும் இதே கேள்வியை கேட்கிறார்கள். அவர் அரசியல் கேள்விகள் கேட்காதீங்க என்று சொல்லிவிட்டு போய்விட்டார். ஆனால் அதற்கு அவர்கள் வைத்திருக்கும் தலைப்பு உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா? ரஜினிகாந்த் ஆவேசம் என்று வைத்திருக்கிறார்கள் என்று பேசியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், மிஸ்டு கால் கொடுத்தாலே பாஜகவில் இணையலாம் என்று சொன்ன, பாசிஸ்டுகள், கடைசியில் சொந்த காலில் நிற்காமல், சந்திரபாபு நாயுடு, நித்தீஷ்குமார் கால்களை பிடித்துக்கொண்டு ஆட்சியை நடத்தி வருகிறார்கள் என்று கூறியுள்ளார்.