தி.மு.க-வின் பி டீம் போல உருவெடுத்து வருகிறது விஜய் கட்சி – வினோஜ் பி செல்வம் விமர்சனம்

தி.மு.க-வின் பி டீம் போல் நடிகர் விஜய் கட்சி உருவெடுத்து வருகிறது என்றும் அவா் பொதுமக்கள் நலனுக்கு ஏற்ப தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பா.ஜ.க மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம் கூறியுள்ளார்.

பழனி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புது ஆயக்குடி பகுதியில் பா.ஜ.க உறுப்பினா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க மாநிலச் செயலா் வினோஜ் பி செல்வம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார்.

புது ஆயக்குடி பகுதியில் வினோஜ் பி செல்வம் வீடுவீடாகச் சென்று பா.ஜ.க அரசு மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். அப்போது, பா.ஜ.க-வில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டையை வழங்கினாா்.

இதைத்தொடர்ந்து, செய்தியாளா்களிடம் பா.ஜ.க மாநிலச் செயலா் வினோஜ் பி செல்வம் கூறுகையில்,  “பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் அரசு அலட்சியமாக செயல்பட்டதால் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெருநகர வளா்ச்சி திட்டம் என்ற பெயரில் யாரையும் ஆலோசிக்காமல் அரசு செயல்பட்டுள்ளது. இதற்கு தோ்தலின் போது மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் சாா்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து அவா்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்தப் போகிறோம்.” என்று கூறினார்.

விஜய் கட்சி குறித்து கருத்து தெரிவித்த வினோஜ் பி செல்வம், “தி.மு.க-வின் பி டீம் போல் நடிகர் விஜய் கட்சி உருவெடுத்து வருகிறது. கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்ல தெரியவில்லை. நடிகா் விஜய் தி.மு.க-வின் பி அணி போல செயல்படுகிறாா். அவா் பொதுமக்கள் நலனுக்கு ஏற்ப தனது நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *